

சென்னை: மெரினா கடற்கரையில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
சென்னை மெரினா கடற்கரையில் 'நம்ம சென்னை' செல்ஃபி மையம் உள்ளது. இங்குள்ள 'நம்ம சென்னை' சின்னத்தின் மீது இளைஞர்கள் சிலர் ஏறி அமர்ந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. மேலும், சில இளைஞர்கள் அந்த சின்னத்தின் மீது மனதில் தோன்றியதை எல்லாம் எழுதி வைத்து அதை பாழ்படுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி நிர்வாகம், அந்த சின்னத்தை தூய்மை செய்து, மீண்டும் வண்ணம் தீட்டி புதுப்பித்துள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள கழிவறைகளின் நிலை, குடிநீர் தொட்டிகளின் நிலை, முதலுதவி சிகிச்சை மைய கட்டிடம், அங்குள்ள நீச்சல் குளம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
அங்கிருந்த அதிகாரிகளிடம், ‘‘கழிவறைகளில் இந்த தூய்மை போதாது. இன்னும் தூய்மையாக வைத்திருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலுதவி சிகிச்சை மையங்களையும் சீரமைக்க வேண்டும். இப்பணிகள் அனைத்தையும் அடுத்த இரு வாரங்களுக்குள் முடிக்க வேண்டும். மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு எந்தவித குறைபாடும் இருக்கக் கூடாது’’ என்று அறிவுறுத்தினார்.