

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது கரோனா தொற்று குறைந்துள்ளது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக ஒருவர்கூட கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெறவில்லை. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 20 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா வைரஸ் மரபணு மாற்றம் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது. கரோனா குறித்து பல நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்தாலும், வட மாநிலங்களில் சில இடங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. டெல்லியில் ஒரு நாளுக்கு கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 300 -ஆக அதிகரித்துள்ளது. எனவே, மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் பூஸ்டர் டோஸ் போட்டுள்ளனர். மக்கள் அனைவரும் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்வது நல்லது. பூஸ்டர் டோஸுக்கு தகுதியானவர்கள் 18.90 லட்சம் பேர் இருக்கும் நிலையில், இதுவரை 8.49 லட்சம் பேர்தான் போட்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அதிக அளவில் முன்வர வேண்டும். இன்னும் 48 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி போடாமல் உள்ள நிலையில், தினமும் லட்சக்கணக்காணோருக்கு தடுப்பூசி போடுவது அவசியம்.
முகக்கவசம் அணிவது, கை கழுவுவது போன்றவை தொடர்பாக நீதிமன்ற உத்தரவுகள் இருந்தாலும், நம் பாதுகாப்புக்காக முகக் கவசம் அணிவது உள்ளிட்ட சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். வெயில் காலம் வந்துள்ளதால் மக்கள் அதிக நேரம் வெளியே நடமாடுவதை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.