

சென்னை: தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தை மாநில பொது சுகாதாரத்துறை மூலம் செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, 2025-ம்ஆண்டுக்குள் காசநோயை முழுவதும் ஒழிக்க வேண்டும் என்றஇலக்குடன் தேசிய காசநோய்ஒழிப்புத் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நோயாளிகளைக் கண்டறிதல், கூட்டு மருந்து சிகிச்சை, தொடர் கண்காணிப்பு ஆகியவற்றால் காசநோயைக் குணப்படுத்தும் விகிதம் உயர்ந்துவருகிறது. இந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களில் 84 சதவீதம் பேர் முதல் சிகிச்சையிலும், மீதமுள்ளவர்கள் தொடர் சிகிச்சைகளிலும் குணமடைகின்றனர். மேலும், சிகிச்சை காலத்தில் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து அளிக்க நிதியுதவியும் வழங்கப்படுகிறது.
இதுவரை காசநோய் ஒழிப்புத் திட்டம் மாநில மருத்துவம் மற்றும் ஊரக சேவைகள் இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்துவந்தது. அதற்கான சிறப்பு இயக்குநர், மாவட்ட அளவிலான உதவி இயக்குநர்கள் இந்தப் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், தேசிய நல்வாழ்வுக் குழுமத் திட்ட இயக்குநரின் பரிந்துரை அடிப்படையில் இவை அனைத்தும் பொதுசுகாதாரத் துறை இயக்குநரின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
முடிவெடுக்க அதிகாரம்
இதன்மூலம் மாநில பொது சுகாதாரத் துறை இயக்குநருக்கு, தேசிய காசநோய் ஒழிப்புத் திட்ட செயலாக்கம் மற்றும் அதுசார்ந்த முக்கிய முடிவுகளை மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியைத் தவிர்த்து, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இந்தமாற்றம் செய்யப்படுவதாக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.