Published : 06 Apr 2016 02:38 PM
Last Updated : 06 Apr 2016 02:38 PM

திருவண்ணாமலையில் பாமகவுக்கு 8-ல் ஒன்றாவது எட்டுமா?- திண்ணைப் பிரச்சாரம் தீவிரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையில் பாமகவினர் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபகாலமாக திருவண்ணாமலை மாவட்டத்தின் மீதான கவனம் பாமகவுக்கு அதிகரித்துள்ளது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தனித்துக் களம் இறங்கும் பாமக, திருவண்ணாமலை மாவட்டத்தில் தங்களைச் சார்ந்த வாக்குகளை அதிகளவில் பெற வேண்டும் என்ற அடிப்படையில் பிரச்சாரம் செய்கிறது.

இது குறித்து பாமக மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அதில், 6 தொகுதிகளில் பாமகவுக்கு செல்வாக்கு உள்ளது. திருவண்ணாமலை, ஆரணியில் நகராட்சிப் பகுதிகள் இருப்ப தால், அவற்றைக் கணிக்க முடிய வில்லை. நகராட்சிப் பகுதியில் வாழும் மக்களின் வாக்குகளை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த போது 2001-ல் நடைபெற்ற தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிட்டு செய்யாறு, வந்தவாசி தொகுதியில் வெற்றி பெற்றோம். தி.மலை தொகுதியில் குறைந்த வாக்கு எண்ணிக்கையில் தோல்வியடைந்தோம்.

2006-ல் நடைபெற்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு பெரணமல்லூர் தொகுதியில் வெற்றிபெற்றோம். அதிகாரிகள், போலீஸார் ஒரு தலைபட்சமாக செயல்பட்டதால் கலசப்பாக்கத்தில் தோற்றோம். 2011-ல் நடைபெற்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் போளூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினோம்.

தி.மலை மாவட்டத்தில் பாமகவுக்கு மிகப்பெரிய வாக்கு வங்கி உள்ளது. இளைஞர்கள் எழுச்சியாக உள்ளனர். அவர்கள் மூலம் திண்ணைப் பிரச்சாரம் செய்து வருகிறோம். பிரதான பிரச்சினையாக, டாஸ்மாக் கடை உள்ளது. அதனால், பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மது ஒழிப்புக்கு பாமக குரல் கொடுத்து வருவதை பெண்கள் வரவேற்கின்றனர். 8 தொகுதிகளில் திமுக, அதிமுக மற்றும் பாமக இடையே போட்டி நிலவினாலும் செங்கம் மற்றும் ஆரணி தொகுதி யில் மக்கள் நலக் கூட்டணியும் பலமாக இருக்கிறது.

பொதுத் தொகுதியில் இருந்த ஆர்வத்தைப் போன்றே, செங்கம் மற்றும் வந்தவாசி தனித் தொகுதிகளில் போட்டியிட பலர் முன் வந்துள்ளனர். வந்தவாசி தனித் தொகுதியில் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளோம்.

பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், காடுவெட்டி குரு ஆகியோர் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபடவுள்ளனர். அவர்களது வருகைக்குப் பிறகு, ஆதரவு மேலும் கூடும் என்ற நம்பிக்கை உள்ளது. 8 தொகுதிகள் இலக்கு என்றாலும், ஒரு தொகுதியிலாவது வெற்றி பெறுவோம். எங்களுக்கு சாதகமாக கீழ்பென்னாத்தூர், வந்தவாசி (தனி), செங்கம்(தனி) ஆகிய தொகுதிகள் உள்ளன” என்றார்.

தி.மலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் தயாராகிவிட்டது.

அதில், வந்தவாசி (தனி) தொகுதியில் மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், போளூர் தொகுதியில் செஞ்சி எம்எல்ஏ கணேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள் என்று பாமக தரப்பில் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x