

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 3-ம் தேதி நடக்கிறது. இதற்காக கடந்த 26-ம் தேதி முதல் ஹோமங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 19 சன்னதிகளின் விமா னங்களும் கும்பாபிஷேகத்துக்கு தயாராக உள்ளன. கும்பாபிஷேகப் பணிகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்பார்வையிட்டு வருகின்றனர். சிறப்பு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்துவது தொடர்பாக விவாதித்து வருகின்றனர்.
கும்பாபிஷேக நாளன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் திரளக்கூடும் என்பதால் அவர்களின் வசதிக்காக காவல்துறை, குடிநீர் வாரியம், சென்னை மாநகராட்சி, தீயணைப்புத்துறை, மின் வாரியம், சுகாதாரத்துறை, போக்குவரத்துத் துறை ஆகிய 7 துறைகள் மற்றும் அமைப்புகளை ஒருங்கிணைத்து அறநிலையத்துறை அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பக்தர்களின் பாதுகாப்புக்காக நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள் ளனர். கோயிலின் உள் மற்றும் வெளிப்பகுதிகளில் 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப் பட்டுள்ளன. புறக்காவல் நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 28-ம் தேதி முதல் மயிலாப்பூர் கோயில் அருகிலேயே தற்காலிக தீயணைப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
சுகாதாரத்துறை தரப்பில், மருத்துவ உதவி குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆம்புலன்ஸ் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. கூட்ட நேரத்தில் மின் தடை ஏற்பட்டால், அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், 24 மணி நேரமும் மின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கான பணிகளில் தமிழ்நாடு மின்சார வாரியம் ஈடுபட்டுள்ளது.
கோயில் மட்டுமின்றி, கோயிலை சுற்றியும், குடிநீர் வழங்குவதற்கு சென்னை குடிநீர் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. .