Published : 27 Apr 2016 11:55 AM
Last Updated : 27 Apr 2016 11:55 AM

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு ஜெ. சொந்தம் கொண்டாடுவதா?- கனிமொழி

திமுக அரசால் தருமபுரியில் கொண்டு வரப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு ஜெயலலிதா சொந்தம் கொண்டாடுவது வெட்கக்கேடான செயல் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து கடத்தூர், தருமபுரி, பென்னாகரம், மாரண்ட அள்ளி, மொரப்பூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, "கடந்த தேர்தல் நேரத்தின் போது கொடுத்த வாக்குறுதியாக இருக்கட்டும் அல்லது சட்டப் பேரவையில் 110-வது விதியின் கீழ் கொடுக்கப்பட்ட வாக்குறுதியாக இருக்கட்டும். இதில் ஒன்றையாவது ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளாரா?.

அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றிப் பெறச் செய்த பொதுமக்களுக்கு ஜெயலலிதா பரிசாக வழங்கியது பால், மின்சாரம், பேருந்துக் கட்டண உயர்வுதான்.

சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின் போது 110-வது விதியின் கீழ் தருமபுரி மாவட்டத்துக்காக இரண்டு அறிவிப்புகளை படித்தார். ஒன்று தருமபுரி மாவட்டத்தில் சிறைச் சாலைக் கட்டப்படும், மற்றொன்று வேலைவாய்ப்பு அலுவலகம் உருவாக்கப்படும் என்றார். இதில் எதையும் அவர் செய்யவில்லை.

ஜெயலலிதா தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் எல்லாம் தமிழகம் மின் மிகை மாவட்டமாக மாறிவிட்டது என்று அபாண்டமாக தைரியமாக பொய்யுரைத்து வருகிறார். தமிழகத்தில் நாள்தோறும் மின்வெட்டு இல்லாத பகுதியே இல்லை என்று கூறலாம்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம்

ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தின் போது ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை அதிமுக அரசுதான் கொண்டு வந்தது என்று பொய் பேசி வருகிறார்.

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ப்ளோரைடால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தரமான குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் 1997-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.576 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.

இந்நிலையில் 2001-ம் ஆண்டு அதிமுக தலைமையிலான ஆட்சி அமைந்தது. 2006-ம் ஆண்டு வரை இத்திட்டத்துக்கென எதையும் அதிமுக அரசு செய்யவில்லை.

மீண்டும் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததும் ரூ.2,000 கோடி மதிப்பில் தலைவர் கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்டது. பல முறைகளுக்கு மேல் இத்திட்டத்தை அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்ட பிறகு இந்த ஆட்சியில் தண்ணீரைக் கூட சரியாக விநியோகிக்கவில்லை.

ஜெயலலிதா செய்யும் ஒரே மாற்றம்!

அதிமுக ஆட்சிக் காலத்தில் எந்த அமைச்சரையும் நிரந்தரமாக பணியாற்ற ஜெயலலிதா விட்டதே இல்லை. நாள்தோறும் அமைச்சர்களை மாற்றுவதை மட்டுமே தனது பணியாக வைத்திருந்தார். தற்போது தேர்தல் வரத் தொடங்கியதும் வேட்பாளர்களை மாற்றிக் கொண்டு வருகிறார். இது மட்டுமே ஜெயலலிதாவுக்கு செய்யத் தெரிந்த ஒரே மாற்றம்.

அறிஞர் அண்ணா ஓவ்வொருவர் வீட்டிலும் நூலகம் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இந்நிலையில், அவரது கனவை நனவாக்கும் வகையில் சென்னையில் உலகத் தரத்துக்கு இணையாக அண்ணா நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டது. ஆனால், திமுகவுக்கு பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காக மருத்துவமனையாக மாற்ற முயன்றார். உயர் நீதிமன்றம் எச்சரித்ததைத் தொடர்ந்து தற்போது அமைதியாக உள்ளார்.

அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு நூலகம் கூட தொடங்கப்படாத நிலையில் சட்டப் பேரவையில் ஜெயலலிதாவை நோக்கி அம்மாவே ஓர் நூலகம் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது.

மது விலக்குக்கு மதுக்கடைகளை அடைக்க வேண்டும் என்று பொதுமக்களும், இளைஞர்களும், பெண்களும் போராடிய போது காவல்துறையைக் கொண்டு தடியடி நடத்தி சிறையில் அடைத்தவர் ஜெயலலிதா.

தற்போது தேர்தல் வரத் தொடங்கியதும் படிப்படியாக மதுக்கடைகளை மூடுவேன் என்று கூறி வருகிறார். இதை பொதுமக்கள் நம்பத் தயாராக இல்லை. தேர்தலில் வெற்றி பெற்ற திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கலைஞர் இடும் முதல் கையெழுத்து மதுவிலக்குக்குத்தான்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x