Published : 16 Apr 2022 06:38 AM
Last Updated : 16 Apr 2022 06:38 AM

ஆத்தங்குடி தரைக் கற்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பம்

அழகிய கலைவண்ணத்துடன் கூடிய ஆத்தங்குடி தரைக்கற்கள்.

திருச்சி: காரைக்குடி அருகிலுள்ள ஆத்தங்குடியில் தயாரிக்கப்படும் தரைக்கற்களுக்கு (டைல்ஸ்) புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூரைச் சேர்ந்த அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் ப.சஞ்சய்காந்தி கூறியது: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகிலுள்ள ஆத்தங்குடியில் குடிசைத் தொழிலாக 50-க்கும் மேற்பட்ட கூடங்களில் ஆத்தங்குடி தரைக்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை இயந்திரங்களை பயன்படுத்தாமல் கைகளாலேயே செய்யப்படுகிறது. குளிர்காலங்களில் லேசான கதகதப்பையும், கோடைக்காலங்களில் குளிர்ச்சியையும் வீடுகளுக்கு கொடுக்கிறது.

இவற்றை செட்டிநாடு தரைக்கற்கள், பூ தரைக்கற்கள், கண்ணாடி தரைக்கற்கள், காரைக்குடி கற்கள் என பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர். பாரம்பரியமிக்க பூ வேலைப்பாடுகளுடன் கூடிய ஆத்தங்குடி தரைக்கற்கள் உலக அளவில் அழிக்க முடியாத புராதன சின்னங்களாக உள்ளன.

இவை பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.

இந்த கற்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு கிடைக்கும் போது கிராம பொருளாதாரம் மேலும் உயரும். நாடு முழுவதும் இந்த கற்களை அனுப்புவதற்கும், பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் வழிவகுக்கும்.

சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழிலுக்கான தொழில்நுட்ப மேம்பாட்டு மையம், செயல்முறை மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு மையம், சென்னை மற்றும் செட்டிநாடு ஆத்தங்குடி ஹெரிடேஜ் தரைக்கற்கள் உற்பத்தியாளர் சங்கத்தின் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து ஆத்தங்குடி தரைக்கற்களுக்கு புவிசார் குறியீடு கோரி விண்ணப்பித்துள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x