

தூத்துக்குடி: திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் சுமார் 150 கிலோ எடை கொண்ட கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. திருச்செந்தூர் வனச்சரக அலுவலர் ரவீந்திரன் தலைமையில் வனவர் ஆனந்த், வனகாப்பாளர் காளிராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இறந்து கிடந்த ஆமை ‘ஆலிவ் ரெட்லி’ என்ற வகையைச் சேர்ந்தது என தெரியவந்தது. இதையடுத்து, திருச்செந்தூர் கால்நடை மருத்துவர் பொன்ராஜ் சம்பவ இடத்துக்கு வந்து ஆமையை பரிசோதனை செய்தார். பின்னர் ஆமை கடற்கரையில் தோண்டி புதைக்கப்பட்டது. இந்த வகை ஆமை திருச்செந்தூர் முதல் ராமேசுவரம் வரையிலான கடலில் அதிக அளவு காண்படும். இது முட்டை இடுவதற்காக கரைக்கு வரும்போது பாறையில் அடிபட்டு இறந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.