Published : 15 Apr 2022 05:39 PM
Last Updated : 15 Apr 2022 05:39 PM

அதிகாரபூர்வமாக 38,025... நிவாரணம் 55,390... தமிழகத்தில் கரோனா மரணங்கள் பதிவில் 17,000+ வித்தியாசம் | HTT Exclusive

கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் சுகாதாரத் துறையால் தினசரி வெளியிடப்படும் கரோனோ அறிக்கையில் 38,025 பேர் மட்டுமே இதுவரை கரோனோ தொற்றால் மரணம் அடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் வருவாய்த் துறை 55,000 பேர் கரோனா தொற்றால் மரணம் அடைந்துள்ளதாகக் கூறி, அவர்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது. இந்த மரண எண்ணிக்கைகளின் வித்தியாசம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

அதேவேளையில், கரோனா தொற்றால் மரணம் அடைந்தவர்கள் என்று வருவாய்த் துறையிடம் இழப்பீடு பெற்றவர்களின் பட்டியலை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்மிடம் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சற்றே தெளிவாகப் பார்ப்போம்.

கரோனா தொற்றாமல் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் இழப்பீடு நிதியை வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. மாநிலப் பேரிடர் ஆணையம் தங்களிடம் உள்ள பேரிடர் நிதியில் இருந்து கரோனா தொற்றால் மரணம் அடைந்தவர்களுக்கு இழப்பீட்டை வழங்கிக் கொள்ளலாம் என்று மத்திய அறிவுறுத்தியது. இந்த அறிவுறுத்தலின்படி மாநில அரசுகள் கரோனா நிவாரண நிதியை வழங்கி வருகின்றன.

தமிழகத்தில் இது தொடர்பான விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து வழங்க மாவட்ட அளிவில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு இது தொடர்பான விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், சில நாட்களுக்கு முன்பு இழப்பீடு பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்படி 20.03.2022-க்கு முன்னர் ஏற்பட்ட கரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வரும் 18.05.2022 தேதிக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக வருவாய்த் துறை தெரிவித்துள்ளது. 20.03.2022 முதல் ஏற்படும் கோவிட்-19 இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 தினங்களுக்குள் தீர்வுகாண வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கரோனா இழப்பீடு பெற்றவர்கள் எத்தனை பேர் என்ற தகவலையும் தமிழக வருவாய்த் துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழகம் முழுவதும் 74,097 விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியே பெறப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக மேற்கொள்ளபட்ட பரிசீலனைக்குப் பின்னர் 13,204 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 55,390 விண்ணப்பங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக வருவாய்த் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் தமிழகத்தில் சுகாதாரத் துறையால் தினசரி வெளியிடப்படும் கரோனோ அறிக்கையில் 38,025 பேர் மட்டுமே கரோனோ தொற்றால் மரணம் அடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் வருவாய்துறை 55,000 பேர் கரோனா தொற்றால் மரணம் அடைந்துள்ளதாகக் கூறி, அவர்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது. இது தமிழகத்தில் அரசு அறிவித்துள்ள மரணங்களை விட அதிக அளவு கரோனா மரணங்கள் பதிவாகி இருக்கலாம் என்று சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இது குறித்து தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது, "கரோனா தொற்றால் மரணம் அடைந்து நிவாரணம் கோரி வரும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, உண்மையான கரோனா மரணமாக இருந்தால் இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இழப்பீடு வழங்கப்பட்ட மரணங்கள் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

பொதுவான மரணங்களின் எண்ணிக்கையிலும்...

இதைத் தவிர்த்து தமிழகத்தில் 2021-ம் ஆண்டை விட 2022-ம் ஆண்டில் பதிவான பொதுவான ஒட்டுமொத்த மரணங்களின் எண்ணிக்கையும் அதிக அளவு உயர்ந்துள்ளன. 2020-ம் ஆண்டு தமிழகத்தில் மொத்தம் 6,90,444 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் மாநகராட்சிகளில் மட்டும் 1,38,840, நகராட்சிகளில் 63,280, பேரூராட்சிகளில் 65,788, கிராமப்புறங்களில் 3,31,945, ஆரம்ப சுகாதார மையங்களில் 361, பாதுகாப்பான பகுதிகளில் 1201, அரசு மருத்துவமனைகளில் 89,029 என்று மொத்தம் 6,90,444 மரணங்கள் பதிவாகியுள்ளன.

2021-ம் ஆண்டு தமிழகத்தில் மொத்தம் 8,73,312 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் மாநகராட்சிகளில் 1,83,385, நகராட்சிகளில் 68,889, பேரூராட்சிகளில் 77,558, கிராமபுறங்களில் 4,03,531, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 514, பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் 1478, அரசு மருத்துவமனைகளில் 1,37,957 மரணங்கள் பதிவாகி உள்ளன. இதன்படி பார்த்தால் 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் தமிழகத்தில் மொத்தம் 1,82,686 மரணங்கள் அதிகம் பதிவாகியிருப்பது கவனிக்கத்தக்கது.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி, கரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு இடையில் உள்ள மரணங்கள் எண்ணிக்கையில் அதிக அளவு வித்தியாசம் இருந்தால், அதற்கான காரணத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 1.82 லட்சம் மரணங்கள் அதிகம் பதிவாகியுள்ளது. எனவே, இவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x