Last Updated : 26 Apr, 2016 02:00 PM

 

Published : 26 Apr 2016 02:00 PM
Last Updated : 26 Apr 2016 02:00 PM

அதிமுகவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது; திமுகவுக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவேன்- செல்வராஜ் அறிவிப்பு

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செல்வராஜ் நேற்று திருச்சி மேற்கு தொகுதியில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

திருச்சி மாவட்ட திமுகவில் கே.என்.நேருவுக்கு எதிராக அரசியல் செய்து வந்தவர் என்.செல்வராஜ்.

கடந்த 1980-1984 வரை திருச்சி தொகுதி எம்.பி.யாகவும், 1987-93 வரை ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக செயலாளராகவும் பதவி வகித்தார்.

மதிமுக தொடங்கியபோது அக்கட்சியில் இணைந்தார். அதன்பின் 1996-ம் ஆண்டு மீண்டும் திமுகவில் இணைந்தார்.

2006-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், முசிறி தொகுதியில் வெற்றி பெற்ற செல்வராஜ், வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இம்முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட செல்வராஜுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் அதிருப்தியடைந்த இவர், திமுகவில் இருந்துதான் விரட்டப்படுவதாக ‘தி இந்து’வுக்கு பேட்டி அளித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த 23-ம் தேதி சென்னை போயஸ் கார்டனில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

அதன்பின் திருச்சி திரும்பிய இவர், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு போட்டியிடும் மேற்குத் தொகுதியில், அதிமுக வேட்பாளர் மனோகரனுக்கு ஆதரவாக நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து என்.செல்வராஜ் ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி:

எந்தப் பதவியையும் எதிர்பார்த்து நான் அதிமுகவில் இணையவில்லை. இதுகுறித்து யாரிடமும், எந்த கோரிக்கையும் விடுக்கவும் இல்லை.

சிலரது சூழ்ச்சியால், திமுகவில் இருந்து விரட்டப்படும் நிலையில் இருந்த எனக்கு தற்போது அதிமுகவில் உரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்வேகத்தில் கட்சிப் பணியை முழு ஈடுபாட்டுடன் மேற்கொள்வேன்.

சென்னையில் முதல்வரைச் சந்தித்துவிட்டு வந்ததும், திருச்சியில் உள்ள அதிமுகவின் 2 மாவட்டச் செயலாளர்களையும் சந்தித்துப் பேசினேன். அதன்பின் இன்றே (நேற்று) அதிமுகவுக்காக பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டேன்.

தற்போது மேற்குத் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளேன்.

அதன் தொடர்ச்சியாக மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி, ரங்கம், திருவெறும்பூர் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் நேரில் சென்று திமுகவுக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளேன். எனது ஆதரவாளர்களும், அவரவர் பகுதிகளில் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

திருச்சி மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் மனோகரனுக்கு ஆதரவாக நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட, திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செல்வராஜ்(வலமிருந்து 2-வது).

செல்போனில் மிரட்டியதாக வதந்தி...

ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளரான பழனியாண்டி தரப்பினர் செல்போனில் தொடர்புகொண்டு என்.செல்வராஜை மிரட்டியதாக நேற்று வாட்ஸ் அப் மூலம் தகவல் பரவியது. இதுகுறித்து செல்வராஜிடம் கேட்டபோது, “இந்த தகவல் தவறானது. என்னை யாரும் மிரட்டவில்லை. ரங்கம் தொகுதியில் கடும் போட்டி இருப்பதால், அங்கு அதிமுகவுக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்ய வேண்டாம் என பழனியாண்டி தரப்பில் இருந்து சிலர் வேண்டுகோள்விடுத்தனர்.

ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்டேன். நான் சார்ந்த கட்சிதான் எனக்கு முக்கியம் என்பதால், ரங்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளரின் வெற்றிக்காக முழுவீச்சில் பாடுபடுவேன் என அவர்களிடம் உறுதியாகக் கூறிவிட்டேன்” என்றார்.

இதுகுறித்து திமுக வேட்பாளர் பழனியாண்டியிடம் கேட்டபோது, “செல்வராஜிடம் நான் பேசவோ, ஆதரவு கேட்கவோ இல்லை. இதற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யார் பேசினார்கள் என எனக்குத் தெரியாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x