Published : 15 Apr 2022 04:42 AM
Last Updated : 15 Apr 2022 04:42 AM
சென்னை: வன்னியருக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு விவகாரத்தில் மேல்நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடந்தது.
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் வன்னியர் சமுதாயத்துக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கி கடந்த ஆண்டு பிப்ரவரியில் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த உள்ஒதுக்கீட்டை எதிர்த்து 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனக் கூறி அதை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். இதை எதிர்த்து தமிழக அரசு மற்றும் பாமக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதேபோல உள்இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘வன்னியர் சமுதாயத்துக்கு மட்டும் பிரத்யேகமாக 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த சட்டம் செல்லாது. இதுதொடர்பான சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது’ என்று தீர்ப்பளித்தது.
இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், வன்னியருக்கான 10.5 சதவீத சிறப்பு இடஒதுக்கீடு தொடர்பான மேல் நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் ரகுபதி, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், எம்.பி.க்கள் பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் ஆ.கார்த்திக், ஆணையர் மா.மதிவாணன், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், சட்டத்துறை செயலர்கள் பி.கார்த்திகேயன், சி.கோபி ரவிக்குமார், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT