Published : 15 Apr 2022 06:14 AM
Last Updated : 15 Apr 2022 06:14 AM
சென்னை: வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தன்னை கைது செய்த 8 காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தில் அவர் அளித்த புகார் மனு:
சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மாற்றுக்கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கள்ள ஓட்டு போடுவதை அறிந்தேன். பல்வேறு குற்றவழக்குகளில் தண்டனை பெற்றுள்ள நரேஷ் என்பவர் கையில் ஆயுதங்களுடன்மக்களை பயமுறுத்தி வாக்குச்சாவடிகளில் இடையூறு செய்ததால் பிடித்து காவலரிடம் ஒப்படைத்தேன்.
அவர் மீது 11-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கடந்த பிப்.20-ம் தேதி இரவு 8 மணி அளவில் வீட்டில் எனது குடும்பத்தினருடன் உணவருந்த முற்பட்டபோது 70-க்கும் மேற்பட்ட காவலர்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து என்னை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.
நான் லுங்கியுடன் இருந்தபோது, உடைமாற்றக்கூட அவகாசம் அளிக்கவில்லை. எனது சட்டையை பிடித்து இழுத்தும் நாற்காலியில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்தும் சென்றனர். மருந்து மாத்திரைகள் எடுக்க அனுமதிக்கவில்லை.
காவல் துறையின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தனிமனித உரிமைக்கு எதிரானது. ஒரு தலைப்பட்சமாக வழக்கு பதிந்து பாரபட்சமாக செயல்பட்டுள்ளனர். எனக்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
எனவே, மனித உரிமை ஆணையம் இந்த மனுவை விசாரித்து வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் சுந்தரவதனம் உள்ளிட்ட 8 காவல் அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT