Published : 15 Apr 2022 06:18 AM
Last Updated : 15 Apr 2022 06:18 AM
கோவை/திருப்பூர்: தொழில் துறையினரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு பிறகு பஞ்சு மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதற்காக மத்திய அரசுக்கும், பரிந்துரை செய்த தமிழக முதல்வருக்கும் கோவை, திருப்பூர் தொழில் துறையினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு (சிஐடிஐ) தலைவர் டி.ராஜ்குமார், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) தலைவர் ரவி சாம்: இந்தியாவின் ஜவுளித் துறைமிகப்பெரும் சரிவை சந்தித்துக்கொண்டிருந்த நிலையில், இறக்குமதிசெய்யப்படும் பஞ்சுக்கான வரியை மத்திய அரசு வரும் செப்டம்பர் மாதம் வரை ரத்து செய்துள்ளது. வழக்கமாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்தியாவில் பஞ்சுக்கு தட்டுப்பாடு ஏற்படும். அதனை சமாளிக்க தற்போதே இறக்குமதிக்கான ஆர்டர்செய்ய வசதியாக வரி விதிப்பை ரத்து செய்துள்ளது வரவேற்புக்குரியது.
உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஜவுளித் துறை இணையமைச்சர் தர்ஷ்னா ஜர்தோஷ், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இதுதொடர்பாக, மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் ஆர்.காந்தி உள்ளிட்டோருக்கும், தமிழக பாஜக தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
ஏ.சக்திவேல் (இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர்): மத்திய அரசு பஞ்சுக்கான இறக்குமதி வரியை நீக்கம் செய்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியாவுடன் பொருளாதார வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள மத்திய அரசின் இந்தபருத்தி இறக்குமதிக்கான வரி நீக்கமும் தொழில்துறையின் மேம்பாட்டுக்கு வழி வகுக்கும். இதற்காகமத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோருக்கு நன்றியை தெரிவிக்கிறோம். ஜவுளித் துறைக்கு அரசு அனைத்து ஆதரவையும் வழங்கி வருகிறது. 2030-ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஜவுளி ஏற்றுமதிக்கு முயற்சி செய்ய வேண்டும்.
ராஜா எம்.சண்முகம் (திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர்): விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டதை, ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் வரவேற்கிறோம்.
எம்.பி.முத்துரத்தினம் (திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம்): 6 மாதங்களுக்கு மட்டும் இறக்குமதி வரி 11 சதவீதத்தை நீக்கியுள்ளனர். உள்நாட்டு பஞ்சு வந்தால்தான், நூல் விலை குறையும். இறக்குமதியால் நூல் விலை பெரிதாக குறைய வாய்ப்பில்லை. மத்திய அரசுக்கு நன்றி சொல்லும் வேளையில், நூற்பாலைகள் உரிய முறையில் திட்டமிட்டு தொலைநோக்கு பார்வையோடு செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ஐடிஎஃப்) தலைவர் பிரபு தாமோதரன்: இறக்குமதி வரியை நீக்கியிருப்பதன் மூலம் , இந்தியாவின் ஒட்டு மொத்த பருத்தி தேவை பூர்த்தியடைவதோடு, ஊக வணிகமும் கட்டுக்குள் வரும். தொழில் துறையின் கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய அரசுக்கும், இதற்கான தொடர் பரிந்துரைகளை அளித்த தமிழக அரசுக்கும் நன்றி.
தென்னிந்திய நூற்பாலைகள் சங்க தலைவர் (சிஸ்பா) ஜெ.செல்வன்: நாட்டில் உள்ள நூற்பாலைகள், குறிப்பாக தமிழகத்தில் உள்ள சிறு நூற்பாலைகள் வரலாறு காணாத பஞ்சு விலை உயர்வால் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வந்தன. பஞ்சு மீது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கும், பரிந்துரை செய்த தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT