Published : 15 Apr 2022 07:22 AM
Last Updated : 15 Apr 2022 07:22 AM

செங்கல்பட்டில் ரூ.65 கோடி செலவில் சர்வதேச யோகா, இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம்: முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 2,93,000 சதுர அடி பரப்பளவில் ரூ.65 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள உலகத் தரம் வாய்ந்த சர்வதேசயோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உலகத்தரம் வாய்ந்தசர்வதேச யோகா மற்றும் இயற்கைமருத்துவ அறிவியல் நிறுவனம் அமைக்க2019-ல் அப்போதைய முதல்வர் பழனிசாமி, சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, ரூ.65 கோடி செலவில், 50 ஏக்கர் நிலப்பரப்பு, 2.93 லட்சம் சதுர அடி கட்டிடம் கட்டும் பணிகள் 2020 ஜன.6-ம் தேதி தொடங்கியது. கடந்த, 2021 செப். 30-ம் தேதி, அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டன.

இங்கு ஆண்டுக்கு 100 மாணவர்கள் இளநிலை மற்றும் முதுநிலை பிரிவில்பயிலும் வகையில், வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 150 படுக்கை தரை தளம் மற்றும் 3 மேல் தளங்கள் வடிவமைக்கப்பட்டு, தரைதளம் மற்றும் முதல் தளத்தில் 150 படுக்கை வசதிகள் உள்ளன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாகச் சிகிச்சை அளிக்க, தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தரை தளத்தில் 200 மாணவர்கள் முதல் தளத்தில் 400 மாணவியர் தங்கும் விடுதி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தரை தளத்தில் 100 மாணவர்கள் மற்றும் 100 மாணவியர் தனித்தனியாக உணவு அருந்தும் வகையில் கட்டிடம்அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, நிலையமருத்துவ இயக்குநர் குடியிருப்பும் உள்ளது. வளாகத்தில் உட்புறச் சாலை,நடைபாதை, சாலை இருபுறமும் உயர்மின்விளக்கு, மழை வெள்ள நீர் வடிகால்கட்டமைப்பு, நடைபாதையுடன் கூடியபூங்கா, சாலையோர பூங்கா, வாகன நிறுத்துமிடம், ஜெனரேட்டர் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இக்கட்டிடத்தை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத், எம்.பி. செல்வம், எம்.எல்.ஏ. வரலட்சுமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில், இயற்கைமருத்துவச் சிகிச்சைகளான நீர் சிகிச்சை,அக்குபஞ்சர், அக்குபிரஷர், யோகாகிரியா சிகிச்சைகள், மண் சிகிச்சைபோன்ற சிகிச்சைகளும், யோகா பயிற்சிகளும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும். மேலும், 100 மாணவர்கள் பயிலக்கூடிய ஐந்தரை ஆண்டு இளநிலை மருத்துவப் பட்டப் படிப்பு (BNYS) மற்றும் 30 மாணவர்கள் பயிலக்கூடிய 3 ஆண்டு மருத்துவப் பட்ட மேற்படிப்புகளும் (MD)வழங்கப்படும், என இந்திய மருத்துவம், ஓமியோபதி துறை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x