

புதுச்சேரி: வழக்கமான ஆற்றல் வளங்களைச் சார்ந்தி ருக்காமல் சூரிய ஆற்றலுக்கு மாறுவது அவசிய தேவை என்று சூரிய ஒளியில் இயங்கும் பேருந்தில் புதுச்சேரிக்கு வந்த மும்பை ஐஐடி பேராசிரியர் வலியுறுத்தினார்.
‘இந்தியாவின் சூரிய நாயகன்’ என்று குறிப்பிடப்படும் பேராசிரியர் சேத்தன் சிங்சோலங்கி புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்துக்கு நேற்று வருகை தந்தார். இவர்,மும்பை ஐஐடி பேராசிரியர் பணியில் ஊதியம் இல்லாத விடுப்பில் உள்ளார். மத்தியப்பிரதேச அரசின் சூரிய சக்தியின் தூதுவராக வும், ‘எனர்ஜி ஸ்வராஜ்’ அறக்கட்டளையின் நிறுவனராகவும் உள்ளார்.
சூரிய ஆற்றலை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில், கடந்த நவ. 2020 முதல் சோலார் பேருந்து மூலம் "எனர்ஜி ஸ்வராஜ் யாத்ரா’ என்ற பெயரில் மும்பையில் தொடங்கி நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறார். இவர், வரும் 2030 வரை இந்த யாத்திரையில் இருக்க உள்ளார். சூரிய சக்தியை மக்கள் 100 விழுக்காடு ஏற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த யாத்திரை நடைபெறுகிறது.
இதற்காக, ‘மொபைல் ஹோம்’ என்ற பெயரில், முற்றிலும் சூரிய ஆற்றலில் இயங்கும் பேருந்தில் பேராசிரியர் சேத்தன் சிங் சோலங்கி பயணித்து புதுச்சேரி வந்தார். இந்த சூரிய ஆற்றல் பேருந்தில், 3.2 கிலோ வாட் சோலார் பேனல்கள் மற்றும் 6 கிலோ வாட் ஆற்றல் சேமிப்பு கொள்கலன் (சோலார் பேட்டரி) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதில் இன்வெர்ட்டரும் உள்ளது. பேருந்தில் விளக்குகள், குளிர்விப்பான், சமையல் அடுப்பு மற்றும் இதர சாதனங்கள் முற்றிலும் சூரிய சக்தியில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக வளா கத்தில் நிறுத்தப்பட்டிருந்த இப்பேருந்தின் தொழில்நுட்பத்தை பலர் ஆர்வமுடன் பார் வையிட்டனர்.
தொடர்ந்து புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தின் பசுமை எரிசக்தி தொழில்நுட்பத் துறையில் சூரிய ஆற்றலுக்கான சாத்தியக் கூறுகள் குறித்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் புதுச்சேரி மத்திய பல்கலைக் கழக துணைவேந்தர் குர்மீத் சிங் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் பேராசிரியர் சேத்தன் சிங் சோலங்கி பங்கேற்று பேசியதாவது: வழக்கமான ஆற்றல் வளங்களைச் சார்ந்து இருப்பதை விட சூரிய ஆற்றலுக்கு நாம் மாறுவது அவசியமான தேவையாக உருவாகியுள்ளது. கடந்த 1950-க்குப் பிறகு, உலகளாவிய ஆற்றல் பயன்பாடு அதிவேகமாக வளர்ந்துள்ளது. அதில் 80 முதல் 85 சதவீதம் வரை புதைபடிவ எரிபொருட்களின் பங்களிப்பு உள்ளது.
தொழில்துறை வளர்ச்சிக்குப் பின்பு, உலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் தேவை. வெப்ப அளவு குறிப்பிட்ட வரம்பை கடந்தவுடன், மாற்றங்கள் மாற்ற முடியாததாக இருக்கும்.
சூரிய ஆற்றலுக்கு முழுமையாக மாற, ‘தவிர், சிறிதாக்கு, உருவாக்கு’ என்ற 3 வகைகளை நாம் பின்பற்றலாம். சூரிய சக்தியாகவே இருந்தாலும் கூட,முடிந்தவரை ஆற்றலைப் பயன்படுத் துவதைத் தவிர்க்கவும்.
நீங்கள் ஆற்றலைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியாவிட்டால், திறமையான சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம்அதன் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்.
3-வதாக உள்நாட்டில், சூரிய சக்தியைக் கொண்டு ஆற்றலை உருவாக்குங்கள். முதலில், உங்கள் நுகர்வைக் கட்டுப் படுத்துங்கள், உங்கள் உற்பத்தியை உள்ளூர்மயமாக்குங்கள் என்று தெரிவித்தார்.