

வில்லிவாக்கம் தொகுதியில் மழைக் காலத்தில் வெள்ளக் காடாகும் சிட்கோ நகர், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மையப்படுத்தி தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ளது.
இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தாடி ம.ராசு, சிட்கோ நகரில் குடிநீர் மற்றும் கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு, தகுதியான அனைவருக்கும் வீட்டு மனைப்பட்டா, சமுதாய நலக்கூடம் சீரமைப்பு என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளைக் கூறி ஓட்டு வேட்டையாடுகிறார். 98-வது வார்டில் மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்துள்ளதாக கூறும் இவர், இதுபற்றி அப்பகுதியில் உள்ள மக்களிடம் மற்றவர்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று பிரச்சாரம் செய்கிறார்.
தனது பிரச்சாரம் குறித்து ‘தி இந்து’விடம் கூறிய தாடி ம.ராசு “நான் கவுன்சிலராக இருக்கும் 98-வது வார்டை 18 பாகங்களாகப் பிரித்து அதில் தலா 5 பேர் வீதம் நியமித்துள்ளேன். அந்த 90 பேரும் என்னுடன் தொடர்பில் இருப்பார்கள். குடிநீர், கழிவுநீர், மின்சாரம் என எந்தப் பகுதியில் பிரச்சினை ஏற்பட்டாலும் அவர்கள் மூலம் தகவல் கிடைத்து பிரச்சினைகளை உடனுக்குடன் சரி செய்துள்ளேன். நான் எம்.எல்.ஏ. வாக தேர்ந்தெடுக்கப்பட்டால் இதே முறையை தொகுதி முழுவதும் பின்பற்றுவேன்” என்றார்.
திமுக வேட்பாளராக போட்டி யிடும் ப.ரங்கநாதன், சிட்கோ நகர் உள்ளிட்ட மழை நீர் தேங்கும் பகுதிகளில் மழைநீர் கால்வாய் அமைப்பேன், வில்லிவாக்கத்தில் அரசு கல்லூரி அமைப்பேன், பாதாள சாக்கடையை மறுசீரமைப்பு செய்து கழிவுநீர் தங்கு தடையில்லாமல் செல்ல வழிவகை செல்வேன் என்று கூறி வாக்கு சேகரித்து வருகிறார். அத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தொகுதிக்காக தான் செய்தவற்றை பட்டியலிட்டும் அவர் வாக்கு சேகரித்து வருகிறார்.
தேமுதிக வேட்பாளர் பாண் டியன், “தொகுதியில் அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து தருவேன். பட்டா இல்லாதோருக்கு இலவச பட்டா வழங்கப்படும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க முறையான கால்வாய் சீரமைப்பு செய்யப்படும்” என்று உறுதியளித்து வாக்குகளை சேகரித்து வருகிறார். நல்லவனாக, நேர்மையானவனாக இருப்பதுடன் எவ்வித அராஜகத்திலும் ஈடுபட மாட்டேன் என்றும் வாக்காளர்களுக்கு அவர் உறுதி அளித்து வருகிறார்.
தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் சென்று வாக்கு சேகரித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஏ.வாகை வேந்தன். “தேர்தலில் வெற்றி பெற்று போகிறவர்கள் திரும்பவும் வந்து பார்ப்பதேயில்லை என்பதே உங்கள் குற்றச்சாட்டு. என்னைத் தேர்ந்தெடுத்தால் நீங்கள் என்னைத் தேடி வர வேண்டாம். நானே உங்களைத் தேடி வந்து குறைதீர்ப்பேன். இத்தொகுதியில் உள்ள 6 வட்டங்களிலும் மக்கள் சேவை மையம் அமைத்து மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வேன்” என்று இவர் உறுதி அளித்து வருகிறார்.
“40 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட கட்சிகள் தமிழகத்தை ஆண்டுள்ளனர். ஆனால், இன்னமும் பல பகுதிகளில் குடிநீரில் சாக்கடை கலந்து வருகிறது. இந்த அவலநிலையை அடியோடு போக்குவேன். ஆபத்தான நிலையில் கட்டிடங்களின் வழியே செல்லும் மின்கம்பியை பூமிக்கு அடியில் கொண்டு செல்ல ஆவன செய்வேன். பட்டா இல்லாத நிலங்களுக்கு பட்டா பெற்றுத் தருவேன். கோயில் குளங்கள் தூர்வாரப்பட்டு, ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு நீர்நிலைகள் மேம்படுத்தப்படும்” என்று வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து வாக்கு சேகரிக்கிறார் பாஜக வேட்பாளர் ஜெய்சங்கர்.
பாமகவின் செயல் திட்டங்களை துண்டு பிரசுரங்களாக வழங்கி பாமக வேட்பாளர் ஜி.வி.சுப்பிரமணியன் வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் செய்தார்.