குருப்பெயர்ச்சி: திட்டை வசிஷ்டேஸ்வர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

திட்டை வசிஷ்டேஸ்வர் கோயிலில் திரண்ட பக்தர்கள்.
திட்டை வசிஷ்டேஸ்வர் கோயிலில் திரண்ட பக்தர்கள்.
Updated on
1 min read

தஞ்சாவூர்: குருப்பெயர்ச்சியை முன்னிட்டு இன்று அதிகாலை, திட்டை வசிஷ்டேஸ்வர் கோயிலில் உள்ள குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரினசம் செய்தனர்

தஞ்சாவூரை அடுத்த திட்டை பகுதியில் அமைந்துள்ள வசிஷ்டேஸ்வரர் கோயில் தமிழகத்தின் தொன்மையான கோயில்களில் ஒன்றாகும். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற கோயில் இதுவாகும். வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரர் சுயம்புவாக தோன்றியதால் தான் தோன்றீஸ்வரர் என்ற பெயர் கொண்டவர். மூலஸ்தான விமானத்தில் சந்திரகாந்தக்கால் வைத்து கட்டப்பட்டுள்ளது.

அக்கல் சந்திரனில் இருந்து வரும் கதிர்களால் காற்றில் இருந்து ஈரப்பதத்தை தன்னுள் உறிஞ்சி 24 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு சொட்டு நீர் மூலவர் வசிஷ்டேஸ்வரர் மீது விழும். இத்தகைய சிறப்பு பெற்ற கோயிலில் நவக்கிரகங்களில் சுபகிரகமான குருபகவான் எங்கும் இல்லா சிறப்போடு சுவாமிக்கும், அம்மனுக்கும் இடையில் தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது குருபெயர்ச்சியாகும்.

அதன்படி இன்று(14ம் தேதி) அதிகாலை 4.16 மணிக்கு குருபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். இதையொட்டி குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது. பின்னர் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு குரு பகவான் அருள்பாலித்தார்.

குருப்பெயர்ச்சியையொட்டி வருகிற 24ம் தேதி லட்சார்ச்சனையும், அதைத்தொடர்ந்து 29ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை 2 நாட்களுக்கு பரிகார ஹோமம் நடக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in