

ஈரோடு: உயர்நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளால், பண்ணாரி - திம்பம் இடையிலான மலைச்சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளதாக தாளவாடி சுற்றுவட்டாரக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள பண்ணாரி - திம்பம் இடையிலான மலைச்சாலையில், வனவிலங்குகளின் பாதுகாப்பு கருதி, இரவு நேர வாகனப் போக்குவரத்துக்கு தடை உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. தடை உத்தரவால் பாதிக்கப்படும் மலைப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்களுக்கு தளர்வுகளையும் உயர்நீதிமன்றம் அளித்துள்ளது. அதே நேரத்தில், திம்பம் சாலையில், 16.2 டன்னுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வரும் லாரிகள் மற்றும் 12 சக்கர லாரிகளுக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளதால், திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சென்று வருகின்றன. இதுகுறித்து தாளவாடி, ஆசனூர் பகுதி மக்கள் கூறியதாவது:
திம்பம் மலைச்சாலையானது 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டதாகும். இச்சாலையில் 12 சக்கர வாகனம் மற்றும் 16.2 டன்னுக்கு அதிகமாக பாரம் ஏற்றிய லாரிகள் செல்லும்போது கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் பழுதடைவதும், விபத்துக்குள்ளாவதும் அடிக்கடி நடந்து வந்தது. அவ்வாறு பழுதடையும்போது, அரசுப் பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் பயணிப்போர், பல மணி நேரம் அச்சத்துடன் மலைப்பாதையில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போதைய உயர்நீதிமன்ற தடையால், உரிய நேரத்தில் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் தாளவாடி, ஆசனூரைச் சென்றடைய முடிகிறது.
இதனால், தாளவாடி ஒன்றியத்தில் உள்ள 10 ஊராட்சிகளில் வசிக்கும் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மலைப்பகுதியில் பணிபுரியும் அரசு ஊழியர் உள்ளிட்டோர் உரிய நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடிகிறது.
அதேபோல் தடை செய்யப்பட்ட கனரக வாகனங்கள் மலையேறும்போது, அதிக அளவில் புகை வெளிப்பட்டு வனப்பகுதி மாசு அடைந்து வந்தது. சுற்றுச்சூழலை பாதிக்கும் இந்த பிரச்சினையும் முடிவுக்கு வந்துள்ளது. திம்பம் சாலையில் பகலில் வாகனப்போக்குவரத்து குறைவு, இரவில் வாகன நிறுத்தம் காரணமாக, வனவிலங்குகள் சாலையைக் கடந்து ஓரிடத்தில் இருந்து மற்றொரு பகுதிக்கு தடையின்றி இடம்பெயர்ந்து வருகின்றன.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி, மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, அவர்கள் தடையின்றி பயணிக்க வழிவகை செய்து தர வேண்டும். பல்வேறு தேவைகளுக்காக, சத்தியமங்கலம் வரும் மலைக்கிராம மக்கள், இரவு 9 மணிக்கு மேல் இரு சக்கர வாகனத்தில் ஊர் திரும்ப முடியாத நிலை உள்ளது. எனவே, இரவு நேரத்தில் கிராம மக்கள் ஊர் திரும்பும் வகையில் பொதுபேருந்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றனர்.