

திருத்தணி: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொத்தடிமையாக பணிபுரிந்து வருபவர்களை, தனியார் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் விடுவிக்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.
அவ்வாறு கொத்தடிமை தொழில் முறையிலிருந்து விடுவிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், திருத்தணி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும், கொத்தடிமை தொழில் முறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 80 குடும்பங்களைச் சேர்ந்த 300 பேர் பயன்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, திருத்தணி அருகே வீரகநல்லூர் பகுதியில் ’சிறகுகள்’ என்ற செங்கல் சூளை அமைக்கப்பட்டுள்ளது. இந்த செங்கல் சூளை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், ரூ.5.80 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த செங்கல் சூளையை நேற்று மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்து, பார்வையிட்டார். இந்நிகழ்வில், இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் என்ற தொண்டு நிறுவனம் சார்பில், செங்கல் சூளைக்குத் தேவையான கருவேல மரங்களை வெட்டுவதற்கான, தலா ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 3 மரம் வெட்டும் இயந்திரங்களை 3 பயனாளிகளுக்கு ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் மல்லிகா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயற்பொறியாளர் ராஜவேல், திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர்களான ஜோதி, பாபு மற்றும் இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் அரசு தொடர்பு மேலாளர் ஹெலன் பங்கேற்றனர்.