Published : 14 Apr 2022 07:03 AM
Last Updated : 14 Apr 2022 07:03 AM

மயிலாப்பூரில் முதியோர் பகல் நேர பராமரிப்பு மையம்: மருத்துவர் வி.எஸ்.நடராஜன் திறந்து வைத்தார்

மயிலாப்பூரில் முதியோர் பகல் நேர பராமரிப்பு மையத்தை மருத்துவர் வி.எஸ்.நடராஜன் நேற்று திறந்து வைத்தார். உடன் வெங்கடேஸ்வரா மருத்துவமனை இயக்குநர் தில்லை வள்ளல், பாலச்சந்தர், தியாகி லட்சுமிகாந்தன் பாரதி.படம்: பு.க.பிரவீன்.

சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக, சென்னை மயிலாப்பூர் நீதியரசர் சுந்தரம் சாலையில், முதியோர் பகல் நேர பராமரிப்பு மையத்தை, முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன் நேற்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், வெங்கடேஸ்வரா மருத்துவமனை இயக்குநர் தில்லைவள்ளல், பொது மேலாளர் பாலச்சந்தர், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தியாகி லட்சுமிகாந்தன் பாரதி ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன் பேசியதாவது: முதியோர் உடல் நலமும், மன நலமும் பேன இந்த மையம் பெரிதும் உதவும். இந்த மையத்தில் உறுப்பினராக சேருபவர்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இங்கு தங்கிக் கொள்ளலாம். தேவைப்படுவோருக்கு மருத்துவ ஆலோசனை, உயர் ரத்த பரிசோதனை, உடற்பயிற்சி ஆகியவை இலவசமாக வழங்கப்படும். நிமோனியா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா நோய்களுக்கு மையத்திலேயே தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இம் மையத்துக்கு தேவையான உதவிகளை டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வெங்கடேஸ்வரா மருத்துவமனை இயக்குநர் தில்லைவள்ளல் பேசும்போது, “நான் என்னுடைய இருப்பிடத்தை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டேன். இந்த இடத்தை ஏதாவது ஒரு நல்ல சேவைக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்போதுதான் இங்கு முதியோர் பகல் நேர பராமரிப்பு மையம் திறக்கலாம் என்று முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன் என்னிடம் கூறினார். அவரது அறிவுரையின்படி இந்த முதியோர் பகல்நேர பராமரிப்பு மையம் உருவாகியுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x