

சென்னை: தமிழக கோயில்களில் இருந்து திருடி புதுச்சேரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.12 கோடி மதிப்புள்ள 600 ஆண்டுகள் பழமையான 3 உலோக சுவாமி சிலைகளை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மீட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள தொன்மையான கோயில்களில் இருந்து திருடப்பட்ட புராதன சிலைகள் புதுச்சேரியில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி உத்தரவுப்படி, ஐ.ஜி தினகரன் வழிகாட்டுதலில், கூடுதல் கண்காணிப்பாளர் அசோக் நடராஜன் தலைமையிலான தனிப்படை போலீஸார் புதுச்சேரி விரைந்தனர்.
அங்குள்ள ஒயிட்டவுன், சப்ரெய்ன் தெருவில் உள்ள வீடு ஒன்றில் இருந்த தொன்மையான நடராஜர், வீணாதாரா சிவன் மற்றும் விஷ்ணு உலோக சிலைகளை பறிமுதல் செய்து சென்னை கொண்டு வந்தனர்.
இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கூறும்போது, ‘தற்போது மீட்கப்பட்டுள்ள சிலைகள் 1980-க்கு முன்பாக தமிழககோயில்களில் இருந்து களவாடப்பட்ட சிலைகளாக இருக்கக் கூடும். இந்த சிலைகள் 600 ஆண்டுகளுக்கு மேலான தொன்மை வாய்ந்தவை. இவை ``சோழர்கள் மற்றும் விஜயநகரப் பேரரசுக்கு இடைப்பட்ட ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தவை என கருதுகிறோம். இந்த சிலைகள் புதுச்சேரியில் ஜோசப் கொலம்பானி என்பவரின் வசம் இருந்துள்ளது. அவர் காலமாகிவிட்டார். அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சிலைகள் பிரான்ஸ் நாட்டுக்கு ஒருமுறை கடத்த முயற்சி நடந்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது மீட்கப்பட்டுள்ள சிலைகள் எந்த கோயிலை சேர்ந்தவை என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ.12 கோடி இருக்கும் எனவும், இந்த சிலைகள் மிகவும் தொன்மையானது என்றும் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்’ என்றனர்.
இதற்கிடையில், சிறப்பாகசெயல்பட்டு புதுச்சேரி சென்று தமிழக சிலைகளை மீட்டு வந்ததமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டினார்.