

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே சின்னசெவலை கிராமத்தில் வசிக்கும் ஆதிக்குடியினர், குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்கள் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே சின்னசெவலை கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி கட்டிடம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகம் ஆகிய பகுதியை ஒட்டி ஆதிக்குடிகளான பூம்பூம் மாட்டுக்காரர்கள் இன சமூகத்தை சேர்ந்த 7 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழில் வீடு வீடாக சென்று மாடுகளை கொண்டு உதவி கேட்பதுதான். ஒரு சிலர் திருஷ்டி பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்கின்றனர். இவர்கள் பல ஆண்டு காலமாக நிரந்தரமான குடியிருப்பு இல்லாமல், செல்லும் இடத்தில் எல்லாம் வாழ்ந்து வருகின்றனர்.
ஆதிக்குடி மக்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவை வழங்காததால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப இயலாமல் உள்ளனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த செல்லம்மாள் கூறியது: ஆதார் கார்டு, இருப்பிட சான்று இல்லாததால் எங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியாது என்றனர். எங்களுக்கு வீடு இல்லாததால் பெண் குழந்தைகளை பாதுகாப்பதில் சிரமமாக உள்ளது. மரத்தடியில் உறங்குகிறோம். மழை நேரங்களில் அரசுப் பள்ளி வராண்டாவில் தங்கிக்கொள்கிறோம். எங்களுக்கு இலவச வீட்டு மனையும், எங்களின் அடையாளத்திற்கு ஆதார் கார்டும் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் மோகன், வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திருவெண்ணெய்நல்லூர் வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.