Published : 14 Apr 2022 06:41 AM
Last Updated : 14 Apr 2022 06:41 AM

தாமதமாக நடத்த திட்டமிட்டுள்ளதால் மதுரை மக்கள் ஏமாற்றம்; திமுக-அதிமுக ‘ஈகோ’வால் பொருட்காட்சி இல்லாத சித்திரை திருவிழா: ஏப்ரல் 20-ம் தேதிதான் டெண்டர்

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் சித்திரைத் திருவிழாவின்போது பாரம்பரியமாக நடந்து வந்த சித்திரைப் பொருட்காட்சியை, இந்த ஆண்டு திருவிழா முடிந்த பிறகே நடத்த செய்தி மக்கள் தொடர்பு துறை திட்டமிட்டிருக்கிறது. பொருட்காட்சி அரங்குகள், மேடைகள் அமைப்பதற்கான டெண்டரே வரும் 20-ம் தேதிதான் நடக்க உள்ளது.

மதுரை சித்திரை திருவிழா நாட்களில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் சித்திரை பொருட்காட்சி ஆண்டுதோறும் தமுக்கம் மைதானத்தில் நடைபெறும். தற்போது அங்கு கலாச்சார மைய கட்டுமானப்பணி நடப்பதால், மாட்டுத்தாவணியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் பொருட்காட்சியை நடத்த ஏற்பாடுகள் தொடங்கின. ஆனால் கள்ளழகர் எதிர்சேவை நடக்கும் தல்லாகுளம் பகுதிக்குப் பதிலாக மாட்டுத்தாவணிக்கு மாற்றுவதற்கு அதிமுக உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனால், வழக்கம்போலவே தமுக்கம் மைதானத்தில் பொருட்காட்சியை நடத்த செய்தி மக்கள் தொடர்பு துறை முடிவெடுத்து, மைதானத்தை சீரமைக்கும் பணியை தொடங்கியது. அதனால் எப்போதும்போல் தமுக்கத்திலேயே சித்திரைப் பொருட்காட்சி நடக்கும் என்று மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், சித்திரைத் திருவிழா முடிவடைய உள்ள நிலையில் தற்போது வரை பொருட்காட்சி தொடங்கப்படாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தமுக்கத்தில் கட்டுமானப்பணி நடப்பதால் அங்கு கூட்டம் திரண்டால் விபத்து அபாயம் இருப்பதால் சித்திரைத் திருவிழா முடிந்த பிறகு பொருட்காட்சியை நடத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சியில் அரங்குகள், மேடை உள்ளிட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான டெண்டரே வரும் 20-ம் தேதிதான் நடக்கிறது. மே மாதம் பொருட்காட்சி நடத்தப்படும்’’ என்றார்.

ஆனால், அதிமுக மாட்டுத்தாவணியில் பொருட்காட்சி நடத்த எதிர்ப்பு தெரிவித்ததாலேயே, பொருட்காட்சியை திருவிழா முடிந்தபிறகு நடத்தலாம் என்ற முடிவெடுத்தாக கூறப்படுகிறது. திமுக-அதிமுகவின் ஈகோவால் பாரம்பரியமாக சித்திரை திருவிழாவுடன் இணைந்து நடத்தப்பட்ட பொருட்காட்சி தற்போது நடக்காமல் போய்விட்டதாகவும், இந்த ஆண்டு பொருட்காட்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், இனி வரும் காலங்களிலும் இதே நடைமுறை தொடர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x