Published : 08 Apr 2016 10:36 AM
Last Updated : 08 Apr 2016 10:36 AM

நல்ல ஜனநாயகம் அமைய அனைவரும் வாக்களிப்போம்!- மாவட்ட வருவாய் அலுவலர் மாணவர்களுக்கு அழைப்பு

‘தி இந்து' - தேர்தல் ஆணையம் இணைந்து நடத்திய விழா

நல்ல ஜனநாயகம் அமைய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கல்லூரி மாணவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் க.சவுரிராஜன் வேண்டு கோள் விடுத்தார்.

‘தி இந்து' மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில், முதல் தலைமுறை வாக்காளர்களுக்கான ‘வாக்காளர் வாய்ஸ்' என்ற மாணவர் திருவிழா நிகழ்ச்சி சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது.

வாக்களிப்பதன் அவசியம் குறித்து கல்லூரி மாணவர்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு ஜேப்பியார் பொறியியல் கல்லூரியின் இயக்குநர் டாக்டர் ரெஜினா ஜேப்பியார் தலைமை தாங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் க.சவுரிராஜன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது: வாக்களிக்க வேண்டியது அனைவரின் கடமை ஆகும். நல்ல ஜனநாயகம் அமைய அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

பொதுவாக தேர்தலில் 60 சதவீதம் என்ற அளவில்தான் வாக்குப் பதிவு இருக்கிறது. வாக்காளர்கள் நிர்ப்பந்தம் காரணமாக வாக்களிக்கும்போது நல்ல ஜனநாயகத்தை அமைக்க முடியாது. வாக்குப் பதிவின் சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

முன்பெல்லாம் தேர்தல் நல்ல முறையில் நடைபெற வேண்டும் என்பதற்காக தேர்தல் பார்வையா ளர்கள் ஆய்வுசெய்ய வருவார்கள். ஆனால், இப்போது வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நடத்தப் படும் விழிப்புணர்வு பணிகளை ஆய்வுசெய்யவும் தேர்தல் பார்வையா ளர்கள் வருகிறார்கள்.

தற்போதைய தேர்தலில் பலர் முதல்முறை வாக்காளர்களாக வாக்களிக்க இருக்கிறார்கள். மாணவர் களாகிய நீங்கள் உங்கள் வாக்குகளை வீணாக்காமல் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். பணமோ வேறு ஏதேனும் பொருளோ வாங்கிக்கொண்டு வாக்களிக்கக் கூடாது என்றார்.

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர்

வாக்களிக்கும் உரிமை கிடைக் காதா என்று உலகின் பல்வேறு நாடுகளிலும் மக்கள் ஏங்கிக்கொண் டிருக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். ‘நான் மட்டும் வாக்களிக்காமல் போனால் என்ன ஆகிவிடப்போகிறது' என்று நம்மில் பலரும் நினைக்கிறோம்.

கோடிக்கணக்கானவர்கள் வாக் களிக்கும்போது நமது வாக்கும் அதிலும் இடம்பெறும் என்ற பெருமிதத்தோடு வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது என்பது கடமை, உரிமை மட்டுமல்ல; அதற்கும் மேலாக அதுவொரு பெருமை அளிக்கும் விஷயம்.

இரா.காளீஸ்வரன், பேராசிரியர், லயோலா கல்லூரி

ஒவ்வொரு மனிதனும் வாக்களிக்க வேண்டும் என்பது நம் முன்னோர்கள் நமக்கு தந்தது. வாக்களிப்பது மிக முக்கியமான கடமை. நாம் வாக்களிக்காமல் இருந்தால் சமுதாயத்தின் வளர்ச்சியும், பண்பாடும், கலாச்சாரமும் ஒன்றுமில் லாமல் போய்விடும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள மாணவர்கள் எல்லோரும் ஜனநாய கத்தை புரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும்.

முதன்முதலாக வாக்களிக்கும் மாணவர்கள்தான், சக்தி வாய்ந்த சமூக வலைதளங்களை சரியாக பயன்படுத்துகிறார்கள். அதைக் கொண்டு தமிழகத்தின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் சக்தியாகவும் உருவெடுத்துள்ளனர்.

சமஸ், ‘தி இந்து' நடுப்பக்க ஆசிரியர்

இந்தியா சுதந்திரம் பெற்றபோது இருந்த மக்கள் தொகையில் 85 சதவீதம் பேர் படிப்பறிவு இல்லாதவர்கள். அப்போது காந்தியும், நேருவும் நாட்டு மக்களுக்கு வாக்குரிமை அளிக்க முடிவு செய்கின்றனர். அது இந்தியாவின் முக்கிய ஜனநாயக நிகழ்வாக அமைந்தது. அதை வெளி நாட்டு பார்வையாளர்களும், வெளி நாட்டு பத்திரிகைகளும் விமர்சித்தன.

உள் நாட்டிலும் அதற்கு எதிர்ப்புகள் இருந்தன. எங்கள் நாட்டு மக்களுக்கு ஜனநாயகம் தெரியும் என்று உறுதியாக மக்களுக்கு வாக்குரிமை அளித்தனர். அதை பொய்யாக்காமல் மக்களும் வாக்களித்தனர். முதல் தேர்தலிலேயே 62 சதவீதம் வாக்குத் பதிவு நடைபெற்றது.

ஆனால் 2014 தேர்தலில் 66 சத வீதம் மட்டுமே வாக்குப் பதிவு நடை பெற்றுள்ளது. கடந்த 69 ஆண்டுகளில் வெறும் 4 சதவீதம் மட்டுமே வாக்குப் பதிவு உயர்ந்துள்ளது.

மாணவர்களிடம் இருந்து மாற் றத்தை தொடங்க வேண்டும். மாணவர் களும், சமூகமும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் நாட்டில் நல்லாட்சி அமையும். நாம் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் உற்சாகமாக கலந்துகொண்டனர். காஞ்சிபுரம் மாவட்ட கலால் உதவி ஆணையர் செந்திவேல், சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் ஜெயக்குமார், ஜேப்பியார் பொறியியல் கல்லூரியின் முதல்வர் சத்யபாமா உட்பட பேராசிரியர்களும் பங்கேற்றனர். கல்லூரியின் என்சிசி மாணவ -மாணவிகள் நடத்திய தேர்தல் விழிப்புணர்வு ஓரங்க நாடகம் அனைவரையும் சிந்திக்க வைப்பதாக இருந்தது. ‘தி இந்து' முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

பாலாஜி, ஜேப்பியார் கல்லூரி- மாணவர்

ஜனநாயகத்தின் பெருமை நமக்குத் தெரியவில்லை. ஜனநாயகத்தின் அருமை தெரிய வேண்டும் என்றால், பிரெஞ்சு மற்றும் ரஷ்ய புரட்சிகளை படித்தால் மாணவர்களுக்குத் தெரிய வரும். வாக்களிப்பது நமது கடமை.

மா.மதன்குமார், டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி- மாணவர்

மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக ஊடகங்கள் மாணவர்களைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறன. அதனால் வாக்குகளை வீணாக்காமல், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்.

யாழினி, ஜேப்பியார் கல்லூரி-மாணவி

இதுபோன்ற விழிப்புணர்வை தேர்தல் நேரத்தில் மட்டும் 20 சதவீத முதல் வாக்காளர்களை மையமாக கொண்டு செய்வதை விட, ஆண்டு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

படங்கள்: ஸ்ரீபரத்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x