ஆர்.கே.நகரில் ஜெ.வை எதிர்க்கும் சிம்லா முத்துச்சோழன்

ஆர்.கே.நகரில் ஜெ.வை எதிர்க்கும் சிம்லா முத்துச்சோழன்
Updated on
1 min read

ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் மகளிர் அணி பிரச்சார குழு செயலாளர் சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுகிறார்.

திமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் இரண்டாவது மருமகள் சிம்லா முத்துச்சோழன் (35). கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாகக் கொண்ட இவர், பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். இவரது இயற்பெயர் ஆண்டனி சிம்லா ஷினி. ஆர்சி கிறிஸ்தவ பிரிவைச் சேர்ந்தவர். இவரது தாத்தா, புனித அந்தோணியார் என்ற திரைப்படத்தை தயாரித்து, அதன்மூலம் போப் ஆண்டவரிடம் ஆசி பெற்றவர்.

முதல்வர் ஜெயலலிதா படித்த அதே சர்ச்பார்க் கான்வென்டில் படித்த சிம்லா, பிபிஏ., எல்எல்பி., முடித்து தற்போது சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். அவரது கணவர் முத்துச்சோழனும் வழக்கறிஞர். இவர்களுக்கு 7-வது படிக்கும் மகன் உள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளாக வழக்கறிஞர் தொழில் செய்து வரும் சிம்லா, 13 ஆண்டுகளாக திமுகவில் பணியாற்றி வருகிறார். முதலில் வடசென்னை மகளிர் வழக்கறிஞர் அணியில் அமைப்பாளராக இருந்தார். தற்போது மாநில மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளராக உள்ளார். முதல்முறையாக தேர்தலில் போட்டியிடும் இவர், ஆர்.கே.நகர் பகுதியில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தியுள்ளார். இலவச சட்ட உதவி மையமும் நடத்தி வருகிறார்.

‘சிம்லா’ என்ற பெயர் குறித்து அவரிடம் கேட்ட போது, ‘‘பழநி, டெல்லி என பெயர் வைப்பதுபோல்தான் சிம்லா என்ற பெயரும் வைத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுபோன்ற பெயர்கள் வைக்கப்படுவது வழக்கம். என் தாயார்தான் இந்த பெயரை வைத்தார்’’ என்றார்.

ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நடிகை குஷ்பு நிறுத்தப்பட உள்ளதாக நேற்று காலை பரபரப்பாக தகவல்கள் வெளியாயின. இதுபற்றி குஷ்புவிடம் கேட்டபோது, ‘கட்சித் தலைமை சொன்னால் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடுவேன்’ என்றார். ஆனால், கடைசி நேரத்தில் திமுக சார்பிலேயே வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in