Published : 14 Apr 2022 06:49 AM
Last Updated : 14 Apr 2022 06:49 AM
தென்காசி/ திருநெல்வேலி: தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவில் மாவட்டத்தில் பரவலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பாதுகாப்பு கருதி பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. சில இடங்களில் 2 முதல் 3 மணி நேரம் வரை மின் விநியோகம் தடைபட்டது.
நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆய்க்குடியில் 116 மி.மீ. மழை பதிவானது. சங்கரன்கோவிலில் 108 மி.மீ., தென்காசியில் 100.40 மி.மீ., சிவகிரியில் 77 மி.மீ., செங்கோட்டையில் 36 மி.மீ., கருப்பாநதி அணையில் 32 மி.மீ., குண்டாறு அணையில் 28 மி.மீ., ராமநதி அணையில் 20 மி.மீ., அடவிநயினார் அணையில் 15 மி.மீ., கடனாநதி அணையில் 10 மி.மீ. மழை பதிவானது.
பலத்த மழையால் தென்காசி, சுரண்டை, கீழப்பாவூர் பகுதிகளில் வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இன்று முதல் 4 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் கூட்டம் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தாலும் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கவில்லை. கடனாநதி அணை நீர்மட்டம் 29 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 44.62 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 14.12 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 24.75 அடியாகவும் இருந்தது.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை மழை நேற்றும் நீடித்தது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நாங்குநேரியில் 64 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. பிற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
பாபநாசம்- 2, சேர்வலாறு- 26, மணிமுத்தாறு- 4.4, நம்பி யாறு- 10, கொடுமுடியாறு- 60, அம்பாசமுத்திரம்- 24, சேரன் மகாதேவி- 14, ராதாபுரம்- 50, களக்காடு- 24.6, மூலைக்கரைப்பட்டி- 6, பாளையங்கோட்டை- 7, திருநெல்வேலி- 2.8. மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி சேரன்மகாதேவியில் 19 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 2 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
பாபநாசம் அணை நீர்மட்டம் 55 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 215 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 354 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 85 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 62 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 300 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT