

திருச்சி: தமிழக மக்கள் மீது மத்திய அரசு இந்தியைத் திணிப்பது போன்ற மாயையை ஏற்படுத்துகின்றனர் என பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.
மத்திய அரசின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின்கீழ் ஏழை குடும்பங்களில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருவதை திருச்சி வரகனேரியில் உள்ள ரேஷன் கடையில் பாஜக மாநில துணைத் தலைவரும், எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் நேற்று பார்வையிட்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
மத்திய அரசிடம் இருந்து வரக்கூடிய நிதி தமிழக மக்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையைக் கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். அந்த நிலுவைத் தொகையைப் பெற்றுத்தர தமிழக பாஜக முயற்சி மேற்கொள்ளும்.
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சட்டப்பேரவையில் பேசியபோது, ஒரு கருத்தை தெரிவித்தார். அப்படி பேசக்கூடாது, அது மரபு இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கலாம். அதற்கு பதிலாக அந்த எம்எல்ஏவை எச்சரித்தது அவசியம் இல்லை. அது முதல்வரின் தகுதிக்கு அழகல்ல.
தமிழகத்தில் 1967-ல் காங்கிரஸ் கட்சி தோற்க இந்தி திணிப்பும் ஒரு முக்கிய காரணம். தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சியே, தமிழகத்தில் இல்லை.
தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் விருப்பப்பட்டால் மட்டும் இந்தியை ஏற்றுக் கொள்ளலாம் என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு. மத்திய அரசு, தமிழக மக்கள் மீது இந்தியைத் திணிப்பது போன்ற மாயையை சிலர் ஏற்படுத்துகின்றனர் என்றார்.