

விருதுநகர்: விருதுநகரில் நேற்று மாலை மின்னல் தாக்கியதில் கட்டிட தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயம் அடைந்தனர். விருதுநகர் கருப்பசாமிநகரில் சதீஷ்குமார் என்பவருக்குச் சொந்தமான புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று வீட்டின் மேல் தளத்தில் தண்ணீர் தொட்டி அமைக்கும் வேலை நடந்தது. கட்டிட தொழிலாளர்கள் 6 பேர் பணிபுரிந்து வந்தனர். நேற்று மாலை பலத்த இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
அப்போது திடீரென மின்னல் தாக்கியதில், கட்டிட பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரோசல்பட்டியைச் சேர்ந்த ஜக்கம்மாள் (55), முருகன்(24), கார்த்திக்ராஜா (28), கருப்புசாமி நகரைச் சேர்ந்த ஜெயசூரியா(22) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சங்கிலி(36), மகேந்திரன்(38) ஆகியோர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த முருகன், கார்த்திக்ராஜா இருவரும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து குறித்து பாண்டியன் நகர் போலீஸார் வழக்குப் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை மாவட்ட எஸ்பி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முதல்வர் இரங்கல் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.