Published : 14 Apr 2022 12:55 AM
Last Updated : 14 Apr 2022 12:55 AM
சென்னை: தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக ஆளுநர் அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், இந்த விருந்தில் பங்கேற்க போவதில்லை என கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்): "தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் குரலையும், தமிழக மக்களின் கோரிக்கைகளையும் முற்றாக நிராகரிப்பதோடு, அரசுக்கு மேலானதொரு அதிகார மையமாக செயல்பட தொடர்ச்சியாக ஆளுநர் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதா உள்ளிட்டவற்றை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தமிழக சட்டமன்றத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் நடவடிக்கைகள், துணைவேந்தர் நியமன பிரச்சனை, இந்தியாவின் பன்மைத்துவத்தை நிராகரிக்கும் உரை போன்ற நடவடிக்கைகளால் தமிழக மக்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் எங்களது கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட யாரும் பங்கேற்பதிலை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) முடிவு செய்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்: "தமிழர் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஆளுநர் சித்திரை நாள் தேநீர் விருந்துக்கு அழைப்பது தமிழகத் தலைவர்களைக் கேலி செய்வதாகவுள்ளது. நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் காலம் கடத்தும் நிலையில் அவர் அழைப்பை எங்ஙனம் ஏற்க இயலும்?
சனாதனக் கருத்தியலின் பரப்புநராகச் செயல்படும் ஆளுநர் சமூகநீதிக் கருத்தியலைச் சிதைக்கும் வகையில்தான் ஏற்கனவே நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பினார். அடுத்து நிறைவேற்றப்பட்ட அதே மசோதாவை இன்னும் கிடப்பில் போட்டிருக்கிறார். இந்நிலையில் அவரது அழைப்பை எவ்வாறு ஏற்க இயலும்? எனவே, ஆளுநரின் தமிழர் விரோதப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆளுநரின் சித்திரை நாளுக்கான தேநீர் விருந்து அழைப்பை விசிக புறக்கணிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா: "தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராகத் தொடர்ச்சியாகத் தமிழக ஆளுநர் செயல்பட்டுவருகிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கிறார். மக்கள் பிரதிநிதிகளாகச் சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் அனைவரும்ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நீட்டிற்கு எதிரான தீர்மானத்தைக் குடியரசுத் தலைவருக்குஅனுப்பாமல் திருப்பி அனுப்பினார். இதுபோன்று தொடர்ந்து தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தினை மனிதநேய மக்கள் கட்சி புறக்கணிக்கும்என முடிவு செய்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT