Last Updated : 13 Apr, 2022 08:26 PM

 

Published : 13 Apr 2022 08:26 PM
Last Updated : 13 Apr 2022 08:26 PM

ஆய்வக அறிக்கை இல்லை என குற்றப்பத்திரிகைகளை திரும்ப அனுப்பக் கூடாது: கீழமை நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு 

மதுரை: குற்ற வழக்குகளில் ஆய்வக அறிக்கை இல்லை எனக் கூறி குற்றப்பத்திரிகைகளை திரும்ப அனுப்பக் கூடாது என்று கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாளையங்கோட்டையைச் சேர்ந்த ராஜபாண்டியன் பாளை. மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, ராஜபாண்டியனின் மகள் நிஷா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

''மனுதாரரின் தந்தை மீது குண்டர் சட்டம் பிறப்பிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி அனுப்பிய மனு தாமதமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த தாமதத்துக்கு அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்கவில்லை. இதுபோன்ற கால தாமதங்கள் சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கூறியுள்ளது. இந்த தாமதம் காரணமாக ராஜபாண்டியன் மீதான குண்டர் சட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

இந்த வழக்கில் 90 நாட்களுக்கு பிறகே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பல வழக்குகளில் தாமதமாக குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படுகின்றன. இந்த தாமதம் காரணமாக கொடூரமான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சுலபமாக ஜாமீன் பெற்று வெளியே சென்று விடுகின்றனர். இதனால் குற்றப்பத்திரிகையை உரிய காலத்தில் நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்ய வேண்டும்.

சில வழக்குகளில் டிஎன்ஏ பரிசோதனை அறிக்கை, ரசாயன பரிசோதனை அறிக்கை இல்லை என்று கூறி குற்றப்பத்திரிகைகளை கீழமை நீதிமன்றங்கள் திரும்ப அனுப்புவதாக தெரிகிறது. இதுபோன்ற காரணங்களுக்காக குற்றப்பத்திரிகைகளை திரும்ப அனுப்பக் கூடாது. கீழமை நீதிமன்றங்கள் ஆய்வக அறிக்கை இல்லை என்பதற்காக குற்றப்பத்திரிகைகளை திரும்ப அனுப்பக் கூடாது. இதனை அனைத்து கீழமை நீதிமன்றங்களும் முறையாக பின்பற்ற வேண்டும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக போலீஸாருக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்' என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x