Published : 13 Apr 2022 06:05 PM
Last Updated : 13 Apr 2022 06:05 PM

பெரம்பலூரில் ரூ.150 கோடியில் தினமும் 6 லட்சம் லி. பால் கையாளும் ஆலை: பால்வளத் துறையின் 36 முக்கிய அறிவிப்புகள்

சென்னை: பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் 6 லட்சம் லிட்டர் பால் கையாளும் வகையில் பால் பொருட்கள் தயாரிக்கும் ஆலை 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்தல், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில், பாலை பதப்படுத்தும் பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் ஆலை 50 கோடி ரூபாயில் அமைத்தல் உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த பால்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, சேலம் மாவட்டம் கருமந்துறையில் உயர் மரபியல் திறனுள்ள கிடேரி கன்றுகள் வளர்க்கும் திட்டம் , பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் விற்பனையை ஊக்குவிக்க 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல், ஈரோடு கால்நடை தீவன தொழிற்சாலயில் 1,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் அறிவித்தார். அதில் இடம்பெற்ற 36 முக்கிய அறிவிப்புகள்:

> பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் நாளொன்றுக்கு 6 லட்சம் லிட்டர் பால் கையாளும் வகையில் பால் பொருட்கள் தயாரிக்கும் ஆலை 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

> செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அச்சரப்பாக்கத்தில் நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறனுடைய பால் பண்ணை 71.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

> நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தும் பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் ஆலை 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

> கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 1 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட பால் பண்ணை ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

> தூய பால் உற்பத்தியினை ஊக்குவிக்கும் வகையில் 50 எண்ணிக்கையில் தொகுப்பு பால் குளிர்விப்பான்கள் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

> கரூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட பால் பண்ணை 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

> கூட்டுறவு சங்கங்களின் மேம்பாடு மற்றும் உறுப்பினர்களின் நலன் கருதி 461 எண்ணிக்கையில் தானியங்கி பால் சேகரிப்பு அலகுகள் (AMCU) மற்றும் 303 எண்ணிக்கையில் செயலாக்க தரவு பால் சேகரிப்பு அலகுகள் (DPMCU) 8.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

> திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட பால் பண்ணை 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

> சேலம் மாவட்டம் கருமந்துறையில் உயர் மரபியல் திறனுள்ள கிடேரி கன்றுகள் வளர்க்கும் திட்டம் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

> தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய அலுவலக கட்டடங்கள் கட்டித்தரப்படும்.

> பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் விற்பனையை ஊக்குவிக்க 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

> ஈரோடு கால்நடை தீவன தொழிற்சாலயில் 1,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

> திருவண்ணாமலை இணைய பால் பண்ணையில் 1,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

> திருவண்ணாமலை இணைய பால் பண்ணையில் புதிய பால் பொருட்கள் தயாரிக்கும் வசதிகள் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

> நீலகிரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் 120 மகளிர் பால் உற்பத்தியாளர்களுக்கு சாண எரிவாயு கலன்கள் (Bio Gas Plant) ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் முன்னோடித் திட்ட அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

> செயற்கை முறை கருவூட்டல் வசதிகளை வலுப்படுத்த 3,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 திரவ நைட்ரஜன் கொள்கலன்கள் 78 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

> கறவைப் பசுக்களில் இனவிருத்தி திறனை மேம்படுத்த சினைத்தருண ஒருங்கிணைத்தல் முறை (Oestrus Synchronization) 50 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

> பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் ஒன்றிய அலுவலர்கள் மற்றும் இணையத்தில் பணியாற்றும் அலுவலர்களின் திறனை மேம்படுத்துவதற்காக மாதவரத்தில் 500 நபர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி 50 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

> பால் கொள்முதல் பதப்படுத்துதல் மற்றும் விற்பனை பணிகளை கணினிமயமாக்கும் திட்டம் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

> அந்தந்த பகுதிக்கேற்றவாறு கறவைகளுக்கான பசுந்தீவன உற்பத்தியினை மேம்படுத்தும் வகையில் "மேம்படுத்தப்பட்ட நவீன தீவனத் திட்டம்" 50 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

> கறவை பசுக்களின் இனவிருத்தியை அதிகரிக்கும் வகையில் உதகமண்டலம் ஜெர்சி பொலிகாளை பண்ணைக்கு 120 ஜெர்சி கலப்பின காளை கன்றுகள் 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

> பால் பண்ணை நுகர்வோர் நலன் கருதி ஒருங்கிணைந்த தரச் சான்று பெற 25 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.

> தமிழ்மொழிக் கல்வியில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பால் உற்பத்தியாளர்களின் வாரிசுகளுக்கு பரிசுத் தொகை வழங்கி ஊக்குவிக்கப்படுவர்.

> 4 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களுக்கு நடமாடும் பால் கறவை இயந்திரங்கள் 20 எண்ணிக்கையில் 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முன்னோடித் திட்டமாக வழங்கப்படும்.

> ஆவின் நிறுவனத்தின் நீண்ட கால நுகர்வோர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படும்.

> நுகர்வோர்களின் தேவையை கருதி 10 வகையான புதிய பால் பொருட்கள் அறிமுகப்படுத்தப்படும்.

> ஒன்றியத்திற்கு மூன்று சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு பரிசுகள் வழங்க கவுரவிக்கப்படும்.

> பால் உற்பத்தியாளர்களின் கறவைகளுக்கு தடையின்றி கால்நடை தீவனம் மற்றும் தாது உப்புக் கலவை வழங்க ஏதுவாக ஒருங்கிணைந்த தீவன கண்காணிப்பு மையம் அமைக்கப்படும்.

> பால் உற்பத்தியாளர்கள் நலன்கருதி அவர்களுக்கான பால் பணப்பட்டுவாடா முறை தாமதமின்றி வழங்கிட ஒன்றுபட்ட பால் பணப்பட்டுவாடா முறை (Unified Milk Cost Payment) நடைமுறைப்படுத்தப்படும்.

> சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை பெறப்பட்டு செயல்படுத்தப்படும்.

> பால் உற்பத்தியாளர்கள் நலன் கருதி பால் உற்பத்தியாளர்களுக்கு அனைத்து இறப்புகளுக்கும் இறுதி சடங்கு செலவு தொகை 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

> தமிழகத்தில் பால்வள மேம்பாடு மற்றும் ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தேவையான பால் கொள்முதல் பதப்படுத்துதல் மற்றும் விற்பனை போன்ற செயல்பாடுகளுக்கான குறுகிய கால இடைகால மற்றும் நீண்ட கால திட்டங்கள் வகுக்கப்பட்டு ஒட்டுமொத்த வளர்ச்சித் திட்டங்கள் NCFDI மற்றும் IRMA மூலமாக செயல்படுத்தப்படும்.

> வளசரவாக்கத்தில் உள்ள ஆவினுக்கு சொந்தமான இடத்தில் நபார்டு மற்றும் NABCONS ஆலோசனை நிறுவனம் மூலமாக அனைவரின் பயன்பாட்டிற்கான பயிற்சி மையம் பல்நோக்கு வணிக வளாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆவின் வர்த்தக மையம் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

> கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திலிருந்து பிரித்து உருவாக்கப்படும்.

> திருப்பத்தூர் மாவட்டத்திற்கு திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திலிருந்து பிரித்து உருவாக்கப்படும்.

> தொடக்க பால் கூட்டுறவு சங்க பணியாளர்களது ஊதிய நிர்ணயம் பணி வரன்முறை போன்ற பலதரப்பட்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்து பரிந்துரை சமர்ப்பிக்க குழு அமைக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x