

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டி அடுத்த தாடிக்காரன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் தோழன் (எ) கோவிந்தசாமி (44). இவர் கடந்த 20 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் காய்ச்சியும், வெளி மாநிலத்தில் இருந்து சாராயம் வாங்கி வந்தும் விற்பனை செய்து வருகிறார். இதுதொடர்பாக ஏற்கெனவே இவர் மீது வழக்குகள் உள்ள நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு குண்டர் சட்டத்தின் கீழ் தோழனை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக, கிருஷ்ணகிரி மதுவிலக்கு போலீஸார் தோழனை கைது செய்து, தருமபுரி சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதால், அவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மதுவிலக்கு டிஎஸ்பி சிவலிங்கம், எஸ்பி சரோஜ்குமார் தாகூர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டிக்கு பரிந்துரை செய்தனர்.
இதனை ஏற்று தோழனை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் போலீஸார் அடைத்தனர்.