Published : 13 Apr 2022 06:50 AM
Last Updated : 13 Apr 2022 06:50 AM
கல்பாக்கம்: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வாயலூர் கிராமத்தில் இம்மாத இறுதியில் தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழக அரசு கடந்த 2021-ம்ஆண்டு தாக்கல் செய்த வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை அறிமுகம் செய்து, தமிழகம் முழுவதும் வேளாண் துறையின் மூலம் விவசாயம் மேம்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான கிராமங்களைத் தேர்வு செய்யும் பணிகளை வேளாண் துறை மேற்கொண்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் வாயலூர், விட்டிலாபுரம், மணமை,புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், வடகடும்பாடி, கொத்திமங்கலம், லட்டூர் ஆகிய 8 ஊராட்சிகள் உட்பட மாவட்டம் முழுவதும் 55 கிராம ஊராட்சிகள் இத்திட்டத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
நிலங்கள் ஒருங்கிணைப்பு
இத்திட்டத்தின் மூலம், பாசன வசதியின்றி தரிசாக உள்ள 15 முதல் 25 ஏக்கர் பரப்பளவிலான நிலங்களை ஒருங்கிணைத்தல், அந்நிலத்தில் ஒன்று அல்லது இரண்டு ஆழ்துளைக் கிணறு அமைத்தல், சூரியஒளி மின்சாரம் வசதி ஏற்படுத்தி ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீர் பெற்றுச்சொட்டு நீர்ப்பாசன முறையில் விவசாயம் செய்தல், அக்கிராமத்தில் உள்ள விவசாய குடும்பங்களுக்கு தலா 3 தென்னை மரங்கள் வழங்குதல், மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள் வழங்குதல் போன்ற திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இம்மாத இறுதியில், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் வாயலூர் ஊராட்சியில் இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகத் தமிழக முழுவதும் 1,997 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அண்ணா மறுமலர்ச்சி திட்டமும் செயல்படுத்துவதால், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஏரி,குளங்கள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களின் நீர்வரத்து கால்வாய்களையும் சீரமைக்க முடியும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT