சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ‘நம்ம சென்னை’ செல்ஃபி சின்னத்துக்கு வர்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள்.படம்: பு.க.பிரவீன்
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ‘நம்ம சென்னை’ செல்ஃபி சின்னத்துக்கு வர்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள்.படம்: பு.க.பிரவீன்

மெரினா கடற்கரையில் செல்ஃபி எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 'நம்ம சென்னை' சின்னத்தை பாழ்படுத்தும் இளைஞர்கள்

Published on

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் 'நம்ம சென்னை' செல்ஃபி சின்னத்தை இளைஞர்கள் சிலர் பாழ்படுத்தி வருகின்றனர்.

சென்னைக்கு வரும் வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினரை ஈர்க்கும் பகுதியாகத் திகழ்கிறது மெரினா கடற்கரை. இந்தியாவில் வேறெங்கும் இவ்வளவு நீள மணற்பரப்பு கொண்ட கடற்கரை இல்லை என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

செல்போன் மூலம் செல்ஃபி எடுத்துக் கொள்பவர்களுக்காக டெல்லி, ஐதராபாத், பெங்களூரு, புவனேஷ்வர், கோவை உள்ளிட்ட நகரங்களில், அந்த நகரின் பெயர் பெரிய அளவில் நிறுவப்பட்டு, அங்கு செல்ஃபி மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல, சென்னையிலும் மக்களின் ஆர்வத்தை நிவர்வத்திசெய்யவும், முக்கிய அடையாளத்தை உருவாக்கும் வகையிலும் சென்னை மாநகராட்சி சார்பில், ஸ்மார்ச் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.24 லட்சம் மதிப்பில் மெரினா கடற்கரை ராணி மேரி கல்லூரி எதிரில் ‘நம்ம சென்னை' என்ற சின்னத்தை நிறுவி, செல்ஃபி மேடைஅமைக்கப்பட்டுள்ளது. இது 10 அடி உயரம், 28 அடி அகலம் கொண்டது. கடும் புயல் வந்தாலும் சேதமாகாத வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரிமாதம், அப்போதைய முதல்வர் பழனிசாமி இதை திறந்துவைத்தார்.

ஏராளமான சுற்றுலாப் பயணிகள், மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் வந்து ‘நம்ம சென்னை' மேடை முன் செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.

இந்நிலையில், சில இளைஞர்கள், விரும்பிய பெயர்களை சின்னத்தின் மீது எழுதி பாழ்படுத்தியும், அவற்றின் மீது ஏறி அமர்ந்தும், எழுத்துக்கு இடையில் புகுந்து அமர்ந்தும், செல்ஃபி மேடை அமைத்ததன் நோக்கத்தை சிதைத்து வருகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “நம்மசென்னை செல்ஃபி சின்னத்துக்கு வர்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் முக்கியத்துவத்தை அறிந்து, அதைப் பாதுகாப்பது மாநகரமக்களின் கடமை என்பதை உணர்த்தும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். மேலும், அவ்வப்போது அப்பகுதியைக் கண்காணிக்குமாறு காவல் துறைக்கும் அறிவுறுத்தப்பட உள்ளது" என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in