சிறைக் கைதிகளால் நடத்தப்படும் அங்காடிகளில் கையாடல்: ஜவாஹிருல்லா கண்டனம்

சிறைக் கைதிகளால் நடத்தப்படும் அங்காடிகளில் கையாடல்: ஜவாஹிருல்லா கண்டனம்
Updated on
1 min read

சிறைக் கைதிகளால் நடத்தப்படும் அங்காடிகளில் கோடிக்கணக்கில் கையாடல் நடைபெற்றிருப்பதால் அதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக சிறைச் சாலைகளில் நடத்தப்படும் அங்காடிகள், உணவகங்களில் கோடிக்கணக்கில் கையாடல் நடந்திருப்பதாக வெளிவந்த செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. புழல் மற்றும் வேலூர் சிறைச்சாலைகள் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு மத்திய சிறைச்சாலைகளில் நன்னடத்தை கைதிகளால் நடத்தப்படும் அங்காடிகள், உணவகங்கள் மற்றும் முடிதிருத்தகங்கள் மூலம் பெறப்படும் வருவாயில் குறிப்பிட்ட தொகை அப்பணியில் ஈடுபட்ட சிறைக் கைதிகளுக்கும், மீதித் தொகை சிறைச்சாலைகள் மேம்பாடு பணிகளுக்கு செலவிடப்படுகிறது.

இந்நிலையில், பல ஆயிரம் ரூபாய் சிறைக் கைதிகளிடம் புழங்கி வருவதாக வந்த புகாரின் அடிப்படையில் வேலூர் சிறையில் சிறைத்துறை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ஆயிரக்கணக்கில் பணம் சிக்கியதையடுத்து அங்காடிகள், உணவகங்கள் தற்காலிகமாக மூட ஆணையிடப்பட்டுள்ளது.

கைதிகளில் மறுவாழ்வுக்காக நடத்தப்படும் இந்த பிரீடம் பஜார் எனப்படும் அங்காடிகளில் நடைபெற்ற இந்த கையாடல்களை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த மோசடியில் தொடர்புடைய சிறைத் துறையினர் உட்பட அனைவரையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தற்காலிகமாக மூடப்பட்டுள்ள அங்காடிகளை மீண்டும் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in