Published : 13 Apr 2022 06:11 AM
Last Updated : 13 Apr 2022 06:11 AM

திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்குப் பின் தமிழகத்தில் தனியார் துறைகள் மூலம் 68 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சர் சி.வெ.கணேசன் தகவல்

அண்மையில் திட்டக்குடியில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான பெண் ஒருவருக்கு பணியாணை வழங்குகிறார் அமைச்சர் சி.வெ.கணேசன்.

விருத்தாசலம்: தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின், 68 ஆயிரம் பேருக்கு தனியார் துறைகள் மூலம் வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், தமிழ்நாடு தொழில் நெறி வழிகாட்டு மையம் மூலம் 23 ஆயிரம் பேருக்கு போட்டித்தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தொழிலாளர் நலன்மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைஅமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித் துள்ளார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் சி.வெ.கணேசன் பேசுகையில், “தமிழக முதல்வர், பொறுப்பேற்ற போது, ‘வேலையில்லா பட்டதாரிகள் மட்டுமின்றி, வேலையின்றி தவிக்கும் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவோம்’ என உறுதி யளித்திருந்தார்.

அதன்படி வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் துறை மூலம் தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து, தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.

இதன்மூலம் சுமார் 14 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை பெறுவர். அதேநேரத்தில் தமிழக வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மூலம் தமிழகத்தில் தனியார் துறையில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் முகமாக 56 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் சுமார் 4 லட்சம் பேர் வரை பங்கேற்ற நிலையில், சுமார் 68 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

இவைகள் அனைத்தையும் பெயரளவுக்கு நடத்தாமல், நிலையான நிறுவனம், ஊதிய உத்தரவாதம், பணி பாதுகாப்பு, பணியிடத்தில் அடிப்படை வசதி, தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்தும் நிறுவனங்களா என ஆய்வு செய்து, அந்தவகை நிறுவனங்களை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கச் செய்து வருகிறோம்.

மே 14-ம் தேதி தஞ்சையிலும், அதைத்தொடர்ந்து திண்டுக்கல், மதுரை, கோவை போன்ற நகரங்களிலும் வேலைவாய்ப்பு முகாமை நடத்த இருக்கிறோம்.

தமிழகத்தில் இயங்கும் 38 தொழில் நெறி வழிகாட்டு மையங்கள் மூலம் டிஎன்பிஎஸ்சி தேர்வு,ரயில்வே, வங்கி போன்றவற்றில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் 23 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். இதில் 569 மாணவர்கள் தேர்ச்சி பெற்று வேலைக்குத் தயாராகி யுள்ளனர். ” என்று தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x