

திருநெல்வேலி/ தென்காசி/ தூத்துக்குடி: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்றும் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும் பிறஇடங் களிலும் இடி, மின்னலுடன் கோடை மழை நீடிக்கிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 63 மி.மீ. மழை கொட்டியது. பிறஇடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
பாபநாசம் - 2, சேர்வலாறு- 20, மணிமுத்தாறு- 0.4, கொடுமுடியாறு- 5, அம்பாசமுத்திரம்- 19, சேரன் மகாதேவி- 9, களக்காடு- 28.4, மூலைக் கரைப்பட்டி- 60, திருநெல் வேலி- 30.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 150 கனஅடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து 343 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 85.50 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 137 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் 350 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி நாங்குநேரியில் 54 மி.மீ. மழை கொட்டியது.
திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையால் சாலைகள் சேதமடைந்துள்ளன. ரெட்டியார்பட்டி சாலையில் மழைநீரும், கழிவு நீரும் தேங்கியிருப் பதால் இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியினரும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகிரியில் 40 மி.மீ. மழை பதிவானது.
அடவிநயினார் அணையில் 15 மி.மீ., கருப்பாநதி அணையில் 11.50, சங்கரன்கோவிலில் 10.30, கடனாநதி அணையில் 5, தென்காசியில் 1 மி.மீ. மழை பதிவானது. கடனாநதி அணை நீர்மட்டம் 28.50 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 44.79 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 12.75 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 23.75 அடியாகவும் இருந்தது.
குற்றாலம் அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது. சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அருவிகளில் மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 8-ம் தேதி முதல் தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மாலை நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. நேற்று முன்தினம் மாலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. குறிப்பாக கடம்பூர், கயத்தாறு, ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் கனமழை பெய்தது.
தூத்துக்குடி நகருக்கு வெளியே மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோரம்பள்ளம், அந்தோணியார்புரம் பகுதியில் பகல் 12.30 மணியளவில் திடீரென மழை கொட்டியது. சுமார் 15 நிமிடங்கள் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளமாக தண்ணீர் ஓடியது.
மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: காயல்பட்டினம் 8, குலசேகரன்பட்டினம் 5, விளாத்தி குளம் 1.5, காடல்குடி 4, வைப்பாறு 25, சூரன்குடி 40, கோவில்பட்டி 36, கழுகுமலை 7, கயத்தாறு 86, கடம்பூர் 92, மணியாச்சி 35, வேடநத்தம் 10, கீழஅரசரடி 1, எட்டயபுரம் 52.1, சாத்தான்குளம் 16.4, வைகுண்டம் 61, தூத்துக்குடியில் 5 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.