

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏழ்மை நிலையில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை கொண்ட பெற்றோர் வருவாய் ஈட்டும் வகையில் துணிப்பை, சோப்பு தயாரிக்கும் புதிய திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை வழங்குவதற்கான சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை தோறும் மருத்துவர்கள் உதவியுடன் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற முகாமை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு செய்ததுடன், இதுவரை நடைபெற்ற முகாம்கள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ‘‘ராணிப்பேட்டை மாவட்டம் புதிதாக ஏற்படுத்தப் பட்டபோது மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை 8 ஆயிரம் என்றளவில் இருந்தது. மாவட்ட நிர்வாகத் தின் தொடர் நடவடிக்கையால் தற்போது 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். இவர்கள் அனைவரின் விவரங் களும் சேகரிக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 7,761 பேருக்கு அடையாள அட்டையும், 3,356 பேருக்கு தேசிய அடையாள அட்டையும், 17 பேருக்கு செயற்கை அவயங்களும் வழங்கப்பட்டுள்ளன. 275 பேருக்கு இலவச பேருந்து பயண அட்டை, 39 பேருக்கு பெட்ரோல் இரு சக்கர வாகனம், 12 பேருக்கு பேட்டரியில் இயங்கும் வீல் சேர் வழங்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் இதுவரை 85 மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்புகள் பெற்றுள்ளனர். முதல் முறையாக கண் பார்வையற்ற ஒருவருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், தனியார் தொழிற்சாலைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மூலம் பட்டா மாற்றம், ஓய்வூதியம், வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளன.
குறிப்பாக, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பராமரிப்பது சிரமமான காரியம். அதிலும், ஏழ்மை நிலையில் இருக்கும் பெற்றோரின் வறிய நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் அளிப்பதற்காக 98 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு குறைந்தபட்ச தையல் தகுதி பயிற்சி அளித்து துணி பைகள் தயாரித்து வணிகர் சங்கங்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இதற்காக 98 பேருக்கு விரைவில் தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளன. மாவட்டத்தில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்திலும் இவர்களின் பங்களிப்பு இருக்கும். இதன்மூலம் அவர்களின் பொருளாதாரம் சற்று உயரும்.
மனவளர்ச்சி குன்றியோர், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 6 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கு பயிற்சி அளிக்க தனியார் மையங்கள் விரைவில் தொடங்கப் படும். மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்கிட ஏதுவாக பொதுத்துறை, கூட்டுறவு வங்கிகள் மூலம் கடனுதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார். அப்போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் உடனிருந்தார்.