

சென்னை: ரூ.100 கோடி மதிப்பீட்டில் பாரம்பரியக் கட்டடங்கள் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைத்து புனரமைக்கப்படும் உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் 190 "சி" வகை அரசு அலுவலர்களுக்கான புதிய அடுக்குமாடி குடியிருப்பு, பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள 308 உதவிப் பொறியாளர் பணியிடங்கள் இந்த நிதியாண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்து நிரப்பப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் நெடுஞ்சாலைகள் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுஅறிவித்தார். அதில் இடம்பெற்ற 5 முக்கிய அறிவிப்புகள்:
> சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் 190 "சி" வகை அரசு அலுவலர்களுக்கான புதிய அடுக்குமாடி குடியிருப்பு ரூ.72 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
மறைந்த முதல்வர் கருணாநிதியால், சென்னை தாடண்டர் நகரில் அரசு அலுவலர்களுக்கு 1500 புதிய குடியிருப்புகள் கட்ட வெளியிடப்பட்ட அறிவிப்பில் இதுவரை 900 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. 190 "பி" வகை குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றது.
2022-23 ஆம் ஆண்டில் 190 "சி" வகை அரசு அலுவலர்களுக்கான ஒரு புதிய அடுக்குமாடி குடியிருப்பு ரூ.72 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
> பொதுப் பணித்துறையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க 308 உதவிப் பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்
பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள 308 உதவிப் பொறியாளர் பணியிடங்கள் இந்த நிதியாண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்து நிரப்பப்படும்.
> 17 பாரம்பரிய கட்டடங்கள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைத்து புனரமைக்கப்படும்
> திறன் மேம்பாடு மற்றும் தரக்கட்டுப்பாட்டிற்காக பொறியியல் மற்றும் ஆய்வக உபகரணங்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்து வழங்கப்படும்
அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் தேவைப்படும் பொறியியல் உபகரணங்கள் (Scientific Instruments) மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆய்வக உபகரணங்கள் ஒரு மண்டலத்திற்கு தலா ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் ரூ.10 கோடி செலவில் கொள்முதல் செய்து வழங்கப்படும்.
> திருவண்ணாமலை மற்றும் வேலூரில் புதிய கூடுதல் சுற்றுலா மாளிகைகள், வாணியம்பாடியில் ஒரு ஆய்வு மாளிகை மொத்தம் ரூ.17.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.