Published : 12 Apr 2022 04:33 PM
Last Updated : 12 Apr 2022 04:33 PM

சொத்து வரியை இனி ஆண்டுதோறும் உயர்த்துகிறது சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் இனி ஆண்டுதோறும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. சென்னை மாநகராட்சியின் அதிகாரபூர்வ அறிவிக்கையின் மூலம் இது தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் இந்த சொத்து வரி உயர்வை அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. சொத்து வரி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணியை தொடங்கியுள்ளது.

இதன்படி சென்னை மாநகராட்சி சொத்து வரி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இனி ஆண்டுதோறும் சொத்து வரி உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிக்கையின் விவரம்: ஒவ்வொரு ஆண்டும் தற்போது உள்ள அடிப்படை தெருக் கட்டணமானது 6 சதவீதம் அல்லது 5 ஆண்டு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் சராசரி வளர்ச்சி வீதம், இவற்றில் எது அதிகமாக உள்ளதோ அதன் அடிப்படையில் உயர்த்தப்படும். இவ்வாறு உயர்வு செய்யப்படும் அனைத்தும் தற்போது மற்றும் புதிய மதிப்பீடுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்" என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த அறிவிப்பு தொடர்பான ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 30 நாட்களுக்குள் ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகை, சென்னை / 600003 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, தெருக் கட்டணத்தை அடிப்படையாகக் கொண்டே சொத்து வரியை சென்னை மாநகராட்சி நிர்ணயித்து வரும் நிலையில், ஒவ்வோர் ஆண்டும் தெருக் கட்டணம் உயர்த்தப்பட்டால், சொத்து வரியும் தாமாக உயரும் என்பது கவனிக்கத்தக்கது.

இது தொடர்பாக, அதிகாரிகளிடம் கேட்டபோது, இது சென்னைக்கு மட்டுமின்றி அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொருந்தும் என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x