Published : 12 Apr 2022 04:36 PM
Last Updated : 12 Apr 2022 04:36 PM

கீழடியில் ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் அகழ்வைப்பக அருங்காட்சியகம்: பொதுப் பணித்துறை அறிவிப்பு 

சென்னை: கீழடியில் அகழ்வைப்பக அருங்காட்சியகப் பணியானது ரூ.11.03 கோடி செலவில், மொத்தம் 31,919 சதுரஅடி பரப்பளவில் 6 முக்கிய கட்டடத் தொகுதிகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டு வருகிறது என்று பொதுப் பணித்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை மீண்டும் கூடியது. இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டடங்கள் (பொதுப் பணித்துறை) துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு துறையின் அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தனர். காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கேள்வி நேரத்துடன் தொடங்கியது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அமைச்சர்கள் பதிலளித்தனர்.

கட்டிடங்கள் (பொதுப்பணித்துறை) துறையின் கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், கீழடி புதிய அகழ்வைப்பக அருங்காட்சியகம் குறித்து, "தமிழர் பண்பாட்டுப் புகழ்பரப்பிவரும் மதுரை கீழடியில் சுமார் 110 ஏக்கர் நிலப்பரப்பளவில் ஒரு தொன்மை நகரிய குடியிருப்பு மற்றும் தொழிற்கூடப் பகுதி இருந்தது கண்டறியப்பட்டு ஆயிரக்கணக்கான தொல்பொருள்கள் தமிழ்நாடு தொல்லியல் துறையால் வெளிக் கொணரப்பட்டுள்ளன.

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்களைக் காட்சியகப்படுத்திட உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய அருங்காட்சியகம் (Museum) அமைக்கும் பணியானது தமிழ்நாடு பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அகழ்வைப்பக அருங்காட்சியகப் பணியானது ரூ.11.03 கோடி செலவில், மொத்தம் 31,919 சதுரஅடி பரப்பளவில் 6 முக்கிய கட்டடத் தொகுதிகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டு வருகிறது. மேற்குறிப்பிட்ட கட்டடங்களில் கல், உலோகம், மணிகள், தந்தப் பொருள்கள், விலங்குகள் குறித்த தொல்பொருள்கள் மற்றும் சுடுமண் பானைகள் போன்ற பொருள்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

அகழ்வைப்பகக் கட்டிடங்களின் வடிவமைப்பு, அப்பகுதியில் உள்ள வீடுகளின் கலைநயத்தைப் பறைசாற்றும் விதமாக முற்றம், தாழ்வாரம் மற்றும் மண்டபங்களுடன் அமைக்கப்படவுள்ளன. மேலும், உள்ளூர் மக்களின் கலை மற்றும் கைவினை திறமைகளை வெளிப்படுத்தும் தோற்றத்துடன் அமைக்கப்படவுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x