Published : 17 Apr 2016 12:18 PM
Last Updated : 17 Apr 2016 12:18 PM

திருச்சி: திமுகவினரின் உற்சாகமும், அதிமுகவினரின் இறுக்கமும்...

திமுக கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர்கள் தர்மலிங்கம் (தெற்கு), அம்பிகாபதி (வடக்கு) ஆகியோர் தலைமை வகித்தனர். திமுக வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்டச் செயலாளருமான கே.என்.நேரு பேசும்போது, “திமுக தேர்தல் அறிக்கைக்கு விவசாயிகள், இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதனை மக்களிடம் முழுமையாக கொண்டு செல்ல வேண்டும். அதிமுக ஆட்சிக்கு முடிவுகட்ட கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, 9 தொகுதிகளிலும் திமுகவினர் தீவிர களப்பணியில் ஈடுபட வேண்டும்” என்றார்.

இக்கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்மாநில தலைவர் காதர்மொய்தீன், திமுக வெளியீட்டு செயலாளர் செல்வேந்திரன், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தியாகராஜன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் ஜெரோம் ஆரோக்கியராஜ் (மாநகர்), ஆர்.சி.பாபு (தெற்கு), ஜெயப்பிரகாஷ் (வடக்கு), முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், மாநகரச் செயலாளர் அன்பழகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

திமுக தலைவர் கருணாநிதியை 6-வது முறையாக முதல்வராக்க பாடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செல்வராஜ் ஆதரவாளர்கள்...

தேர்தலில் போட்டியிட முன்னாள் அமைச்சர் செல்வராஜூக்கு வாய்ப்பளிக்கப்படாததால் அதிருப்தியடைந்த செல்வராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திருச்சியில் நேற்று நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதேபோல மாநிலங்களவை எம்.பி. சிவாவும் பங்கேற்கவில்லை.

அதிமுக ஆலோசனை கூட்டம்...

திருச்சியில் வரும் 23-ம் தேதி முதல்வர் பங்கேற்கவுள்ள பிரச்சார கூட்டம் தொடர்பாக 3 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது.

திருச்சி மாநகர்- புறநகர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய 3 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து அமைச்சர் பி.தங்கமணி பேசியது:

இதுவரை இல்லாத அளவுக்கு திருச்சி என்றால் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் அனைத்து நிர்வாகிகளும் கட்சியினரையும், பொதுமக்களையும் கூட்டத்துக்கு அழைத்து வர வேண்டும். இங்கு திரளும் கூட்டம் தமிழகத்தில் அதிமுகவை வெல்ல யாரும் இல்லை என்ற நிலையை உணர்த்த வேண்டும். நாளைய உள்ளாட்சி, கூட்டுறவுப் பிரதிநிதிகளாக அதிமுகவினர் மட்டுமே இருக்க வேண்டுமெனில், சட்டப்பேரவைத் தேர்தலை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும் என்றார். இந்தக் கூட்டத்தில் பேசிய 3 மாவட்ட நிர்வாகிகளும் முதல்வர் பங்கேற்கும் கூட்டத்துக்கு அதிகளவில் ஆட்களை அழைத்து வர வேண்டும் என்பதை வலியுறுத்தியே பேசினர்.

வேறு எந்த ஆலோசனையும் இந்தக் கூட்டத்தில் வழங்கப்படவில்லை.

கூட்டத்தில், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் மனோகரன், புறநகர் மாவட்டச் செயலாளர் ரத்தினவேல், எம்பி குமார், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பூனாட்சி, சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, துணை மேயர் சீனிவாசன் உட்பட 3 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x