Published : 12 Apr 2022 02:07 PM
Last Updated : 12 Apr 2022 02:07 PM

புதிய வகை கரோனா XE பரவலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - விஜயபாஸ்கர் vs மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன் (இடது), சி.விஜயபாஸ்கர் (வலது)

சென்னை: "ஒமிக்ரான் வைரஸ் XE வடிவத்தில் வந்தாலும், இல்லை வேறு எந்த வடிவத்தில் வந்தாலும், அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறது" என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் கூறியுள்ளார். புதிய வகை கரோனா XE பரவலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எழுப்பிய கேள்விக்கு, அவர் இவ்வாறு பதிலளித்தார்,

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை மீண்டும் கூடியது. இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டடங்கள் (பொதுப்பணித்துறை) துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கேள்வி நேரத்துடன் தொடங்கியது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழகத்தில் புதிய வகை கரோனா வந்துள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தி குறித்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

முன்னாள் அமைச்சரான சி.விஜயபாஸ்கர், ”கரோனா பெருந்தொற்றுக் காலம் முடிந்து, 3-வது அலையும் முடிந்து நல்ல சூழ்நிலையில் தற்போது நாம் பயணித்துக்கொண்டிருக்கிற நிலையில் இருந்து வருகிறோம். இந்த நிலையே தொடர வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பு, ஆவல் மற்றும் எண்ணமும் அதுதான்.

ஆனால், அண்மையில் வந்துகொண்டிருக்கக்கூடிய செய்திகளில், குறிப்பாக இந்தியாவில், தமிழகத்தில் வைரஸைப் பொருத்தவரை ஏற்கெனவே டெல்டா, பின்னர் ஒமிக்ரான் வந்தாலும்கூட , தற்போது ஒமிக்ரானில் 7 துணை திரிபுகள் வந்துள்ளதாக செய்திகள் வந்துகொண்டுள்ளன. அதனை மருத்துவர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். அந்த துணை திரிபுகளில் "XE" என்பது ஒருவகை திரிபு. ஒரு 10 சதவீதம் வேகமாகப் பரவி வருவாதகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக குஜராத், மும்பை மாநகராட்சி மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட 627 என்ற எண்ணிக்கையில் இந்த வைரஸ் பதிவாகியுள்ளது. தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் XE வைரஸ் பதிவாகியுள்ளது. ஜூன் மாதத்தில் இது இந்தியாவிலும் பரவக்கூடிய வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். மத்திய அரசு சார்பில், மகராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

தமிழகத்தில் தகுதிவாய்ந்த 18 வயதுக்கு மேற்பட்டோர், 48 லட்சம் பேர் இன்னும் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை. இரண்டாவது தவணை தடுப்பூசியை 1 கோடியே 37 லட்சம் பேர் எடுத்துக்கொள்ளவில்லை. எனவே 2 கோடி பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத நிலையில், ஒருவேளை ஜூன் மாதத்தில் பரவத் தொடங்கினால், அதனைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, முன்னெச்சரிக்கை பணிகள் என்ன, ஆயத்தப் பணிகள் என்ன, மக்களுக்கு என்ன அறிவுரை வழங்கப்பட்டுள்ளது, எனவே தடுப்பூசி செலுத்துவதில் உள்ள தொய்வை சரி செய்து ஜூன் மாதத்துக்குள் 2 கோடி தடுப்பூசிகளை அரசு செலுத்த வேண்டும் என்று அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

இதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பதில்: > கரோனா உருமாற்றம் என்பது, கரோனா, ஆல்ஃபா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், அதே போல, ஒமிக்ரான், காமா, கப்பா என்று தொடர்ந்து பல பெயர்களில் உருமாறிக் கொண்டேயிருக்கிறது.

> ஒமிக்ரான் உருமாற்றம் என்பது 7 வகையாக இருக்கிறது என்று அண்மையில் சொல்லப்பட்டிருக்கிறது.

> இங்கிலாந்தைப் பொருத்தவரை 627 பேருக்கு இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது. இது கண்டறியப்பட்டு ஒரு மாத காலமாகியும், ஒமிக்ரானைவிட 10 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்று சொன்னாலும் கூட, எண்ணிக்கை 627 என்ற நிலையிலேயே அங்கு இருந்து கொண்டிருக்கிறது. எனவே இதுவொரு ஆறுதலான செய்தி.

> 2019 டிசம்பர் 1-ம் தேதி கரோனா முதல் தொற்று உலகத்தில் பதிவானது.

> இந்தியாவைப் பொருத்தவரை, 2020 ஜன.27-ம் தேதி கேரளாவில் திருச்சூரில் ஒரு தொற்று பதிவானது.

> தமிழகத்தைப் பொருத்தவரை, 2020 மார்ச் 7-ம் தேதி முதல் தொற்று உருவானது.

> திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, 2021 மே 7-ம் தேதி பதவியேற்ற அன்று, 25 ஆயிரத்து 435 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்று மிக வேகமான உச்ச நிலையில் இருந்தது.

> இரண்டாவது அலையின் தாக்கம் என்பது உலகமே படு கதறலோடு இருந்த நேரத்தில், முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிதீவிர நடவடிக்கைகளின் காரணமாக இரண்டாவது அலையும் முற்றுக்கு வந்தது, மூன்றாவது அலையும் இல்லாமல் போய், கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தில் 50-க்கும் கீழான தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து ஒரு மாத காலமாக உயிரிழப்பு ஏதும் இல்லாத நிலை தமிழகத்தில் இருந்து வருகிறது.

> கடந்த 3 அலைகளிலும், தமிழகத்தைப் பொருத்தவரை 34 லட்சத்து 53 ஆயிரத்து 112 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 38 ஆயிரத்து 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

> இருப்பினும் இந்த 3-வது அலையில் பெரிய அளவிலான பாதிப்புகள் தொடர்ச்சியாக இல்லாமல் போனது.

> நேற்று முன்தினம் ஆய்விற்காக சென்னை வந்திருந்த தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் ஆரோராவை நேரில் சந்தித்தேன். ஒமைக்ரானிலிருந்து புதிதாக பரவி வருகின்ற XE உருமாற்றம் குறித்து கேட்டேன். அதற்கு அவர், அது உண்மைதான் பெரிதாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று கூறினார்.

> 627 பேருக்கு இங்கிலாந்தில் வந்திருக்கிறது. அதுமட்டுமின்றி குஜராத், மகராஷ்டிராவில் இந்த உருமாற்றம் கண்டறியப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.ஆனாலும்கூட மத்திய அரசின் சுகாதாரத்துறை இந்தியாவில் வந்திருக்கக்கூடிய உருமாற்றம் XE- இல்லை என்று கூறி வருகின்றனர்.எப்படியிருந்தாலும், XE- ஒமைக்ரானின் 7 வகையான உருமாற்றங்களில் ஒன்றாக இருந்துகொண்டிருக்கிறது.

> முதல்வரின் உத்தரவுப்படி, சர்வதேச விமான நிலையங்களிலிருந்து வருகை தரும் அனைவரையும் அரசு கண்காணித்துக் கொண்டிருக்கிறது.

> ஒவ்வொரு விமானத்திலும் வருகை தரும் 2 சதவீதம் பேருக்கு தொடர்ச்சியாக ஆர்டி பிசிஆர் பரிசோதனைகளை செய்து கொண்டிருக்கிறோம்.

> இந்தியாவிலேயே ஒரு மாநில அரசு முதன்முறையாக முழு மரபணு வகைபடுத்துதல் கருவியைப் பெற்றுள்ளது. இதை, தமிழக முதல்வர் 2021 செப்டம்பர் 14-ம் தேதி டிஎம்எஸ் வளாகத்தில் திறந்துவைத்தார். இதன்மூலம் வைரஸ் உருமாற்றங்களை தமிழக அரசு கவனித்து கண்காணித்துக் கொண்டிருக்கிறது.

> நாளை மறுநாள், தமிழக முதல்வர் ரூ.365 கோடி செலவில், 2096 புதிய அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கான மேம்படுத்தப்பட்ட படுக்கைகளை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திறந்துவைத்து, அதன்மூலம், தமிழகம் முழுவதும் இருக்க்ககூடிய அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் திறந்து வைக்கிறார்.

> எனவே ஒமைக்ரானின் பரவல் அது XE வடிவத்தில் வந்தாலும், அது எந்த வடிவத்தில் வந்தாலும், அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறது.

> தடுப்பூசியைப் பொருத்தவரை, இந்த அரசு பொறுப்பேற்பதற்கு முன்னா், தினசரி தடுப்பூசி சராசரி என்பது, 61 ஆயிரத்து 441-ஆக இருந்தது. அந்த சமயத்தில் ஒட்டுமொத்தமாக போடப்பட்ட தடுப்பூசியின் எண்ணிக்கை 63 லட்சம் என்ற நிலையிலேயே இருந்தது. ஆனால் இன்று காலை வரை தமிழகத்தில் போடப்பட்ட தடுப்பூசியின் எண்ணிக்கை 10 கோடியே 55 லட்சத்து 17 ஆயிரத்து 959. இதில் முதல் தவணை என்பது 92.37 சதவீதம், இரணாடவது தவணை தடுப்பூசி 77.19 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது.இந்தியாவிலேயே தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாக மாற்றிக் காட்டியவர் முதல்வர் ஸ்டாலின். தொடர்ந்து 27 வார காலம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.

> புதிய உருமாற்றங்கள் நம்மை அச்சுறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. தற்போது இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும், ஜெர்மனியிலும் தினந்தோறும் 30 ஆயிரம் பாதிப்புகள் இருந்துகொண்டுள்ளது. பிரேசிலில் நேற்று 21 ஆயிரம் பேர், ஆஸ்திரேலியாவில் 41 ஆயிரம், தென் கொரியாவில் 90 ஆயிரம், பிரான்சில் 1 லட்சம் பேருக்கு புதிய தொற்று இருந்து கொண்டிருக்கிறது பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் இந்த உருமாறிய கரோனா மக்களை அச்சுறுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. எனவே தமிழகத்தில் அந்த தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. பெரிய அளவில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அரோரா கூறியிருக்கிறார். இருந்தாலும் அரசு எச்சரிக்கையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x