Published : 12 Apr 2022 04:18 AM
Last Updated : 12 Apr 2022 04:18 AM
சென்னை: தமிழகத்தில் சூரிய ஒளி மின்னுற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பெட்ரோலிய பாதுகாப்பு ஆராய்ச்சி சங்கம் (பிசிஆர்ஏ), பெட்ரோலிய பொருட்களை சேமிப்பதன் முக்கியத்துவம் மற்றும் மாசு வெளியேற்றத்தை குறைப்பது குறித்து ஆண்டுதோறும் பொதுமக்களிடம் ‘சக்ஷம்’ என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி, ‘பசுமை மற்றும் தூய்மை ஆற்றல் வாயிலாக இந்திய சுதந்திர அமுதப் பெருவிழா’ என்ற கருப்பொருளுடன் கடைபிடிக்கப்படுகிறது.
ஏப்.11 முதல் 22 வரை நடைபெறும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை, ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘‘வருங்கால சந்ததிக்கு நாம் ஆரோக்கிய சுற்றுச்சூழலையும், சீரான எதிர்காலத்தையும் தர வேண்டும். படிம எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து, அதற்கு மாற்றாக சுத்தமான, பசுமை எரிபொருளை தயாரிக்க வேண்டும். இதன்மூலம், பூமி மாசடைவது தடுக்கப்படும். காற்றாலை மின்னுற்பத்தி போல தமிழகத்தில் சூரிய ஒளி மின்னுற்பத்தியையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
பின்னர், எரிபொருள் சிக்கனம் குறித்த பள்ளி மாணவர்களின் ஓவியக் கண்காட்சியை திறந்து வைத்தார். விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்தார். ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
விழாவில், இந்தியன் ஆயில் நிறுவன மாநில தலைவர் பி.ஜெயதேவன், செயல் இயக்குநர் (மண்டல சேவைகள்) கே.சைலேந்திரா, பிசிஆர்ஏ தென்மண்டல தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏ.எம்.சந்தோஷ்குமார், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் தென்மண்டல தலைவர் (சில்லறை விற்பனை) புஷ்பகுமார் நய்யார், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனதென்மண்டல தலைவர் சஞ்சய் மாத்தூர், கெயில் நிறுவனத்தின் மண்டல பொது மேலாளர் ராஜீவ் லோச்சன் பால் ஆகியோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT