

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறைமானியக் கோரிக்கை மீதான விவாதத்தை தொடங்கி வைத்து அதிமுகஉறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம்தான் பள்ளிக் கல்வித் துறையின் பொற்காலம். அதிமுக ஆட்சியில்தான் கல்வித்தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. 2-வது கல்வித் தொலைக்காட்சியை அரசு தொடங்க வேண்டும்.
பள்ளிக்கு மாணவர்களின் வருகை, தேர்வு முடிவுகளை குறுந்தகவல் மூலம் பெற்றோருக்கு அனுப்புவது, ஆசிரியர் வருகைக்கு பயோமெட்ரிக் பதிவு என பல சாதனைகள் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்டன. அப்போது மத்தியஅரசே பாராட்டும் வகையில் கல்வித் துறையின் செயல்பாடுகள் இருந்தன. மருத்துவக் கல்லூரிகளில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடுவழங்கியும் சாதனை நிகழ்த்தப்பட்டது.
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் இருந்து ரூ.600 கோடியைஎடுத்து, உயர்கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 அளிக்கப்படும் என்று இந்த அரசு அறிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில் சமூக நலத் துறை மூலம் திருமண உதவித் திட்டமாக தாலிக்கு தங்கம் வழங்கியதில் ரூ.760.22 கோடி செலவிடப்பட்டது. அரசுப் பள்ளி மாணவிகளின் உயர்கல்விக்கு செலவிட ரூ.250 கோடி இருந்தாலே போதும். எனவே, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கைவிடாமல் தொடர வேண்டும்.
தமிழகத்தை எப்போதும் திராவிட இயக்கம்தான் ஆளும். வேறு யாராலும் இந்த மாநிலத்தை ஆள முடியாது. நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை போன்றவற்றில் மாணவர் நலன் கருதி அரசுக்கு துணை நிற்போம். இவ்வாறு அவர் கூறினார்.