Published : 22 Jun 2014 10:25 AM
Last Updated : 22 Jun 2014 10:25 AM

மதுரை மாநகராட்சி வாகனங்களில் ‘கேன் கேனாக’ டீசல் திருட்டு: நள்ளிரவில் ஆய்வுக்குச் சென்ற உதவி ஆணையர் அதிர்ச்சி

மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவின் கட்டுப்பாட்டின் கீழ் குப்பை லாரி, குடிநீர் லாரி, தெருவிளக்கு பழுதுநீக்கும் வாகனம், புல்டோசர், ஜேசிபி, டிராக்டர்கள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றை நிறுத்தி வைத்து எடுத்துச் செல்ல மண்டலவாரியாக தனித்தனி பணிமனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி முதலாவது மண்டலத் துக்கு உள்பட்ட வாகனங்கள் கோச்சடையிலும், இரண்டாவது மண்டலத்துக்கு உள்பட்ட வாகனங் கள் செல்லூரிலும், மூன்றாவது மண்டலத்துக்கு உள்பட்ட வாகனங்கள் புதுராமநாதபுரம் சாலையிலும், நான்காவது மண்ட லத்துக்கு உள்பட்ட வாகனங்கள் வைகை வடகரை பகுதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்களில் இருந்து மர்ம கும்பல் நீண்ட நாள்களாக டீசல் திருடுவதாக புகார் வந்தது.

இதற்கிடையே மூன்றாவது மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியதால் பொதுமக்கள் அடிக்கடி மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுகிறதா என்பதை அறிய மூன்றாவது மண்டல உதவி ஆணையர் செல்லப்பா இரு தினங்களுக்கு முன் நள்ளிரவில் திடீரென ஆய்வுக்குச் சென்றார்.

அப்போது புதுராமநாதபுரம் சாலையிலுள்ள மாநகராட்சி வாகனங்கள் நிறுத்துமிடத்தையும் எதேச்சையாகப் பார்வையிடச் சென்றார். அவரைக் கண்டதும் வாகனங்களுக்கு இடையே நின்றிருந்த ஒரு கும்பல் அங்கிருந்து வேகமாக தப்பியோடியது. அதிர்ச்சியடைந்த அவர் அருகில் சென்று பார்த்தபோது, அந்த கும்பல் கைவிசைப் பம்பு மூலம் லாரிகளில் இருந்து டீசலைத் திருடியது தெரியவந்தது. அங்கு தலா 20 லிட்டர் கொள்ளளவுடன் கூடிய 10-க்கும் மேற்பட்ட கேன் களும் இருந்தன. அவற்றைப் பறிமுதல் செய்த உதவி ஆணையர் செல்லப்பா இதுபற்றி உடனடியாக மாநகராட்சி ஆணை யர் சி.கதிரவனுக்கு தகவல் தெரிவித்தார். அவரது அறிவுறுத் தலின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் சிலர் அன்றிரவே தெப்பக்குளம் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸாரிடம் இதுபற்றி வாய்மொழியாக புகார் அளித்தனர். பின்னர் மாநகராட்சி ஆணையருடன் கலந்து பேசி, மறுநாள் எழுத்துப்பூர்வமாக புகார் அளிப்பதாக கூறிவிட்டு திரும்பி வந்தனர். ஆனால் மீண்டும் அங்கு சென்று இதுவரை புகார் அளிக்க வில்லை. இந்த திருட்டு குறித்து புகார் தர மாநகராட்சி அதிகாரிகள் முன்வராமல் இருப்பது போலீ ஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி யுள்ளது. எனவே இதன் பின்னணி குறித்து போலீஸார் ரகசிய விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விரைவில் சிசிடிவி கேமரா

இதுபற்றி மாநகராட்சி ஆணை யர் சி.கதிரவனிடம் கேட்டதற்கு, ‘நடந்த சம்பவம் உண்மைதான். அன்று குடிநீர் ஆய்வுக்காகச் சென்ற உதவி ஆணையர் எதேச்சையாக இதனைப் பார்த்திருக்கிறார். இது பற்றி காவல் நிலையத்தில் புகார் கூற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்க அனைத்து வாகன நிறுத்துமிடங்களிலும் விரைவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

மேலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் தனியார் நிறுவன பாதுகாவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x