Published : 12 Apr 2022 07:20 AM
Last Updated : 12 Apr 2022 07:20 AM
கோவை: இந்தி மொழி தொடர்பாக, மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு, இந்திய அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரவும், சமையல் எரிவாயு உருளை விலையைக் குறைக்கவும் மத்திய அரசை வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறை சார்பில், கோவையிலிருந்து சென்னைக்கு பாதயாத்திரை செல்லும் நிகழ்வு கோவையில் நேற்று தொடங்கியது.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பாத யாத்திரையைத் தொடங்கி வைத்து பேசினார். மனித உரிமை துறை மாநிலத் தலைவர் மகாத்மா னிவாசன் தலைமையில் 56 பேர், 550 கி.மீ தூரம், வரும் 28-ம் தேதி வரை பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். நிகழ்வில், காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா எஸ்.ஜெயக்குமார், ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா, மாவட்ட தலைவர்கள் கருப்புசாமி, வி.எம்.சி.மனோகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர், மாநிலத் தலைவர்கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தி பேசாத மாநிலங்களும் இந்தி மொழியைப் பின்பற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு இந்திய அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. இந்தியாவில் மொழிப்பிரச்சினை வந்தபோது, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை, ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கும் என்றார். அந்த உத்தரவாதத்தின் அடிப்படையில்தான் இன்று இந்தியாவில் மொழிப்பிரச்சினை இல்லாமல் இருக்கிறது. ஆனால், பாகிஸ்தானில் மொழிப்பிரச்சினை ஏற்பட்டுதான், 2 நாடுகளாக மாறியுள்ளன. இந்நிலை இந்தியாவுக்கு வரக்கூடாது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு தெளிவான எச்சரிக்கையை கொடுத்துள்ளார். இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீது ரூ.26 லட்சம் கோடிக்கு வரிவிதிப்பு செய்த காரணத்தால், அப்பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. வரிவிதிக்காமல் இருந்திருந்தால், இவற்றின் விலை உயராது.
இந்தியாவில் நிலவும் விலைவாசி உயர்வால் மக்கள் அமைதி யாக இல்லை. இன்றைக்கு சிரமங்களை மக்கள் பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT