

சென்னை: சசிகலாவைப் பொதுவெளியில் இனி யாரும் விமர்சிக்க வேண்டாம் என நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலாவைக் கட்சியிலிருந்து நீக்கிய அதிமுக பொதுக் குழுவின் தீர்மானம் செல்லும் என்று சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இதில், துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம், கட்சியின் வழிகாட்டுதல் குழு நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், கோகுல இந்திரா, பா.வளர்மதி மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். மாலை 6 மணிக்குத் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் இரவு 7.30 வரை நடைபெற்றது. அப்போது, சசிகலா குறித்து பொதுவெளியில் இனி யாரும் பேசவோ, விமர்சிக்கவோ வேண்டாம். அவருக்கும் கட்சிக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை என்று ஆகிவிட்டது. அவ்வாறு பேசினால், அதனை அவர் சாதகமாக எடுக்கக்கூடும். மேலும், அவரின் கருத்துகளுக்கு பதிலளிக்க வேண்டாம். அதேபோல, அதிமுகவின் கொடி, சின்னம் ஆகியவற்றை அவர் தொடர்ந்து பயன்படுத்தினால், நீதிமன்றம் மூலமே அதனை அணுகலாம் என்றும் ஓபிஎஸ், இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக ஜெயக்குமார் கூறியதாவது: 2017-ம் ஆண்டு அதிமுகவின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, கட்சியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டார். தற்போது சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அவர் முன்னர் அறிவித்ததுபோல அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொள்வதுதான் நல்லது. அவருக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவருக்காக இனி யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியில் இருந்தோம். ஆனால், நகர்ப்புற தேர்தலில் கூட்டணியில் இல்லை. பாஜவுடன் கூட்டணி குறித்து கட்சிதான் முடிவு செய்யும். எனவே, இணைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம் என்பது தவறானது. இவ்வாறு அவர் கூறினார்.