

கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர் வால் விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, சைக்கிளில் வந்து ஆட்சியரிடம் விவசாய அமைப்பினர் மனு அளித்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன்தலைமை வகித்து பொதுமக்களி டம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள், பல்வேறு இயக்கத்தினர் என மொத்தம் 388 மனுக்கள் பெறப்பட்டன.
செஞ்சிலுவை சங்கம் முன்பு இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி தலைமையிலான விவசாயிகள் சைக்கிளில் வந்து, ஆட்சியரிடம் மனு அளித்தனர். பின்னர், சங்கத்தலைவர் சு.பழனிசாமி செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘‘தற்போது விவசாயப் பணிகளுக் காக டிராக்டர், டிரில்லர், பொக் லைன் வாகனம் போன்றவற்றை பயன்படுத்தி வருகிறோம். உற்பத்தி பொருட்களை விற்பனைக் கூடங்களுக்கு எடுத்துச் செல்லடிராக்டர், டெம்போ ஆகியவற்றை பயன்படுத்தி வருகிறோம். விவசாயிகளின் விளை பொருட்கள், கடந்த 3 மாதங்களாக கடுமையான விலை வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இச்சூழலில், கடந்த 10 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால், விவசாயத்துக்கு பயன்படுத்தும் இயந்திரங்களின் வாடகையும் உயர்ந்துள்ளது.
இதன் மூலம் விவசாயிகள் பொருளாதார பின்னடைவை சந்திக்க வேண்டிய சூழல் நிலகிறது. எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்கவும், விவசாயிகளுக்கு மானிய விலையில், பெட்ரோல், டீசல் கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.