Published : 12 Apr 2022 06:15 AM
Last Updated : 12 Apr 2022 06:15 AM

குறிப்பிட்ட சமூகத்துக்கு கோயில் விழாவில் பங்கேற்க தடை: நடவடிக்கை கோரி திருப்பூர் ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் சு.வினீத் தலைமையில் நேற்று நடைபெற்றது. பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.

ஊத்துக்குளி வட்டம் வெள்ளிரவெளி கிராம மக்கள் அளித்த மனுவில், "எங்கள் பகுதியில் ஏராளமானோர் வசிக்கிறோம்.  மாரியம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் 7 கிராமங்களைச் சேர்ந்த அனைத்து தரப்பு சமுதாய மக்களும் சேர்ந்து விழா நடத்துவோம். கோயில் நிர்வாகம் சார்பில் நிர்ணயம் செய்யும் திருமாங்கல்யம் வரித் தொகையை ஒவ்வொரு சமுதாயத்தை சேர்ந்த மக்களிடம் இருந்து கோயில் நிர்வாகம் வசூல் செய்யும். இதற்கு ரசீது வழங்கப்படும். ஆனால், குறிப்பிட்ட சமூகத்தினரிடம் மட்டும் திருமாங்கல்ய வரி வாங்க மாட்டோம். சலங்கை ஆட்டம் ஆடக்கூடாது. மா விளக்கு எடுக்கக்கூடாது என தடை விதித்துள்ளனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவிழாவில் கலந்துகொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் உரிமையை மீட்டுத் தர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

சிவசேனா கட்சி இளைஞர் அணி மாநிலத் தலைவர் திருமுருகதினேஷ் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், "கால்நடைகள் துன்புறுத்தப்பட்டு கடத்திச் செல்வது குறித்து, சிவசேனா கட்சி சார்பில் பலமுறை மாநில கட்டுப்பாட்டு அறைக்கும், மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கும் தொலைபேசியில் புகார் தெரிவித்துள்ளோம். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நாட்டு மாடுகளை காக்கவும், பால் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்காகவும், விவசாயம் செழிப்பதற்காகவும், திருப்பூர் மாவட்ட எல்லைகளில் எஸ்.பி.சி.ஏ. சோதனைச் சாவடி அமைக்க வேண்டும். சட்ட விதிமுறைகளை மீறி வாகனங்களில் ஆடு, மாடு, கோழி, பன்றி ஆகியவற்றை லாரிகளிலும், பிற வாகனங்களிலும் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில், எல்லைகளில் சோதனைச் சாவடி அமைக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்ப்புலிகள் கட்சி மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர் திருப்பதி மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், "எலையமுத்தூரில் இருந்து சுமார் 800 மீட்டர் தூரத்தில் உள்ள ஆண்டியக்கவுண்டனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கிறோம். எங்கள் பகுதியில் நீர் நிலை குளம் உள்ளது. குளத்தில் இருந்து வெளியேறும் நீர் வழிப்பாதையை, தனியார் கார்ப்பரேட் சோலார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளது. இந்த குளத்தை நம்பி ஏராளமான விவசாயிகள் பாசனம் செய்து வருகிறார்கள். இந்த சோலார் நிறுவனத்தை அகற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x